மலாக்கா: போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுகளை பள்ளிக் குழந்தைகளுக்கு விநியோகித்த குற்றத்திற்காக மலாக்காவில் சிங்கப்பூர் ஆடவரும் அவரது மலேசியா மனைவியும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஜாசின் பெஸ்தாரி என்னும் இடத்தில் கைதான அந்த 41 வயது ஆடவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் 38 வயது மாதை திருமணம் செய்ததாக மலாக்கா காவல்துறைத் தலைமை அதிகாரி துல்கைரி முக்தர் தெரிவித்தார்.
வாடகை வீட்டில் தங்கியிருந்த அந்தத் தம்பதியை கடந்த திங்கட்கிழமை (மே 26) ஜாசின் வட்டார போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு புலன்விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
கடந்த மூன்று மாதங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அந்தத் தம்பதி மின்சிகரெட் திரவம், போதை மாத்திரைகள், போதைப்பொருள் தூள் ஆகியவற்றை விநியோகித்து வந்ததாக அவர் செவ்வாய்க்கிழமை (மே 27) செய்தியாளர்களிடம் கூறினார்.
சமூக ஊடகங்கள் வாயிலாகவும் நெருக்கமான பழக்கம் உள்ளவர்கள் மூலமும் அவற்றை அவர்கள் விநியோகித்ததாக நம்பப்படுகிறது என்றார் அவர்.
ஏராளமான போதைப்பொருளுடன் தம்பதியின் காரும் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டதாக திரு துல்கைரி தெரிவித்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் 786 போதைப் புழங்கிகள் பயன்படுத்தும் அளவில் இருந்தது என்றும் அவற்றின் மதிப்பு 32,650 ரிங்கிட் (S$9,900) என்றும் அவர் குறிப்பிட்டார்.