கூலாய்: ஜோகூரில் செடனாக்கிற்கு அருகில் உள்ள வடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் சிங்கப்பூர் மாது ஒருவர் உயிரிழந்தார்.
அவரது காதலன் மோசமாகக் காயமுற்றார். விபத்து குறித்து செவ்வாய்க்கிழமை (டிசம்பர்) 10ஆம் தேதி காலை 9.15 மணிவாக்கில் காவல்துறைக்குத் தகவல் கிடைத்ததாக கூலாய் காவல்துறை மாவட்ட உதவி ஆணையர் டான் செங் லீ கூறினார்.
“சிங்கப்பூரைச் சேர்ந்த 23 வயது ஆடவர் அவரது 21 வயது காதலியுடன் அதிவேகத்தில் செல்லக்கூடிய மோட்டார்சைக்கிளில் பயணம் செய்துகொண்டிருந்தார். அவர்கள் கோலாலம்பூரிலிருந்து சிங்கப்பூர் திரும்பிக்கொண்டிருந்தனர்,” என்றார் அவர்.
“அந்த ஆடவர் கட்டுப்பாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதினார்,” என்று உதவி ஆணையர் டான் கூறினார்.
மோட்டார்சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த மாதிற்குத் தலையில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன என்றும் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் உதவி ஆணையர் டான் தெரிவித்தார்.
மோட்டார்சைக்கிளோட்டியின் கால்களில் காயம் ஏற்பட்டது.
இருவரும் தெமங்கொங் ஸ்ரீ மஹாராஜா துன் இப்ராஹிம் கூலாய் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக உதவி ஆணையர் டான் கூறினார்.