கொழும்பு: இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஈரானியக் கப்பல் மீது புதன்கிழமை (மார்ச் 4) நடத்தப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்; 78 பேர் காயமடைந்துள்ளனர். குறைந்தது 101 பேரைக் காணவில்லை என்று இலங்கைக் கடற்படையும் தற்காப்பு அமைச்சும் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எந்த நாட்டு நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதலை நடத்தியது என்பது தெரிவிக்கப்படவில்லை.
ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) என்ற அந்தப் போர்க்கப்பல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் பன்னாட்டுக் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றுவிட்டு ஈரான் திரும்பிக்கொண்டிருந்தது.
இலங்கையின் காலி துறைமுகத்திலிருந்து 40 கடல்மைல் தொலைவில் கப்பல் தாக்கப்பட்டது. கப்பலிலிருந்து வந்த அவசர உதவி அழைப்பை அடுத்து, இலங்கைக் கடற்படை மீட்புப் பணியைத் தொடங்கியதாக தற்காப்பு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
முன்னதாக, மூழ்கிக்கொண்டிருந்த அந்தப் போர்க்கப்பலில் இருந்து கடுமையாகக் காயமுற்ற 32 பேர் காப்பாற்றப்பட்டதாகவும் அவர்கள் தீவின் தென்பகுதியில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் வெளியுறவு அமைச்சர் விஜிதா ஹெராத் தெரிவித்தார்.
இரண்டு இலங்கைக் கடற்படைக் கப்பல்களும் ஒரு விமானமும் மீட்புப் பணியில் ஈடுபட்டதாகக் கூறிய அவர், கப்பல் மூழ்கியதற்கான காரணத்தைத் தெரிவிக்கவில்லை.
ஒருவரது நிலைமை மோசமாக உள்ளது. எழுவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். மற்றவர்கள் சாதாரண காயங்களுக்குச் சிகிச்சை பெற்றனர் என்று சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி டாக்டர் அனில் ஜெயசிங்கே கூறினார்.
கப்பலில் இருந்த மற்ற ஊழியர்களைத் தேடும் பணி தொடர்வதாக இலங்கைத் தற்காப்பு அமைச்சு கூறியது.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், தங்கள் மீட்பு நடவடிக்கை இலங்கையின் கடல்துறை விதிகளுக்கு உட்பட்டிருந்ததாகவும் கொழும்புக்கு 115 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காலி நகரின் மருத்துவமனைக்கு அந்த 32 மாலுமிகள் கொண்டுசெல்லப்பட்டதாகவும் கடல்துறைப் பேச்சாளர் புதிக்கா சம்பத் கூறினார்.
தாக்குதல் தொடர்பான விவரங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
எனினும், ஈரானியக் கடற்படைமீது அமெரிக்கா தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிபர் டிரம்ப் அமெரிக்கப் படைகள் 10 ஈரானியக் கப்பல்களை மூழ்கடித்துள்ளதாகத் தெரிவித்தார். ஆனால், அவை எங்கு மூழ்கடிக்கப்பட்டன என்று அவர் குறிப்பிடவில்லை.

