இலங்கையில் மதுவால் நாள்தோறும் 50 பேர் உயிரிழப்பு

1 mins read
d1dd71f6-536c-4ddc-bd40-76cc5381dcce
இலங்கையில் புழங்கப்படும் மதுவில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு கள்ள மது எனச் சொல்லப்படுகிறது. - மாதிரிப்படம்: பிக்சாபே

கொழும்பு: மதுப்பழக்கம் காரணமாக இலங்கையில் சராசரியாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழப்பதாக அந்நாட்டின் மது, போதைப்பொருள் தகவல் நிலையம் தெரிவித்துள்ளது.

சட்டப்படியாகவும் கள்ளத்தனமாகவும் மது பயன்பாட்டால் நேரும் மரணங்கள் இந்த எண்ணிக்கையில் அடங்கும் என டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மக்கள்தொகையில் 20 விழுக்காட்டிற்கும் குறைவானவர்களே மது அருந்துவதாக நிலையத்தின் இயக்குநர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார். அவர்களில் 34.8 விழுக்காட்டினர் 15 வயதிற்கு மேற்பட்ட ஆடவர்கள். 0.5 விழுக்காட்டிற்கும் குறைவான பெண்களே மது அருந்துவதாகச் சொல்லப்படுகிறது.

கள்ள மதுப் புழக்கம் அதிகரித்து வருவது குறித்து திரு சம்பத் கவலை தெரிவித்தார். இலங்கையில் புழங்கப்படும் மதுவில் கிட்டத்தட்ட 10 விழுக்காடு கள்ள மது என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு, புள்ளிவிவரத் துறை தெரிவிக்கிறது.

“கள்ள மதுவால் நாளொன்றுக்கு 5-6 மரணங்கள் நேர்கின்றன. ஒட்டுமொத்தத்தில், ஒரு நாளைக்கு 50 பேர்வரை மதுவால் உயிரிழக்கின்றனர். ஆனாலும், அதுபற்றி எவரும் வாய்திறப்பதில்லை,” என்று திரு சம்பத் வருத்தப்பட்டார்.

புகையிலையால் 22,000 பேர் மரணம்

இதனிடையே, புகையிலை மற்றும் சிகரெட் பயன்பாட்டால் இலங்கையில் ஆண்டுதோறும் 22,000 பேர் இறக்க நேரிடுவதாக நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் நேரும் மரணங்களில் 83 விழுக்காட்டிற்குத் தொற்றா நோய்களே காரணம் எனக் கூறப்பட்டது. அதற்கான நான்கு முக்கியக் காரணிகளில் புகையிலைப் பயன்பாடும் ஒன்று.

அந்நாட்டில் தோராயமாக 1.5 மில்லியன் பெரியவர்களுக்குப் புகைப்பழக்கம் இருப்பதாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்