கொழும்பு: வெளிநாட்டுச் சுற்றுப்பயணியிடமிருந்து 800,000 ரூபாய் (S$3,490) மதிப்புள்ள உடைமைகளைப் பறித்தபின் அவரைப் பாறையிலிருந்து தள்ளிவிட்ட முன்னாள் காவல்துறை ஆய்வாளர் இலங்கையில் கைதுசெய்யப்பட்டார்.
சாரா அரார் என்ற அல்ஜீரியப் பெண் மே 7ஆம் தேதி இலங்கையைச் சென்றடைந்தார். கண்டியைச் சுற்றிப் பார்த்தபின் அவர் நுவரெலியாவிற்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து ஒரு வேன் மூலம் எல்ல நகருக்கு அவர் புறப்பட்டார்.
அப்பயணத்தின்போது சாராவிற்கு வேன் ஓட்டுநர் பழச்சாறு கொடுத்ததாகவும் அதனைக் குடித்தபின் அவர் மயங்கிவிட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து, வேனை ஆளரவமற்ற இடத்திற்கு ஓட்டிச் சென்ற ஓட்டுநர், நினைவின்றிக் கிடந்த சாராவை வேனிலிருந்து இறக்கினார். அவரது பணத்தையும் உடைமைகளையும் எடுத்துக்கொண்ட ஓட்டுநர், 30 அடி உயரப் பாறையிலிருந்து அவரைத் தள்ளிவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பினார்.
காயமடைந்தபோதும் சுயநினைவு திரும்பியபின் பல கிலோமீட்டர் தொலைவு நடந்துசென்று எல்ல காவல் நிலையத்தில் புகாரளித்தார் சாரா. பின்னர் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது புகாரின் அடிப்படையில், காவல்துறை சந்தேகப் பேர்வழியை அடையாளம் கண்டு கைதுசெய்தது. அவர் ஓட்டிசென்ற வேனையும் சாராவிற்குச் சொந்தமானதாகக் கருதப்படும் இரண்டு விலைமதிப்புமிக்க கைப்பேசிகளையும் காவல்துறை பறிமுதல் செய்தது.
கைதான 70 வயது வேன் ஓட்டுநர், ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் எனத் தெரிவிக்கப்பட்டது. விசாரணை தொடர்கிறது.