279 பேரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு: பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை

279 பேரை பலிவாங்கிய இலங்கை குண்டுவெடிப்பு: பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை

2 mins read
837fd496-b09e-493d-9c55-61da104348ff
2019 ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பில் 279 பேர் கொல்லப்பட்டனர்; 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். - கோப்புப் படம்: ஏஎஃப்பி
multi-img1 of 2

கொழும்பு: இலங்கையில் 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் காவல்துறைத் தலைமை அதிகாரி பூஜித் ஜெயசுந்தர, 66, முன்னாள் தற்காப்பு அமைச்சின் செயலாளர் ஹேமஸ்ரீ ஃபெர்னாண்டோ, 76, ஆகியோர் தண்டனை விதிக்கப்பட்ட அதிகாரிகள்.

குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு உள்நாட்டு இஸ்லாமியத் தீவிரவாதக் குழு ஒன்று காரணம் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்தக் கொடூரமான தாக்குதல்களைத் தடுப்பதில் அதிகாரிகள் இருவரும் தங்கள் கடமைகளிலிருந்து தவறிவிட்டனர் என, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாமியத் தீவிரவாதிகளால் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்படலாம் என 2019 ஏப்ரல் 4ஆம் தேதியே இந்திய உளவுத்துறை இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கைத் தகவல் அனுப்பியது. ஆயினும், அது தொடர்பான எந்த நடவடிக்கையும் அரசாங்கத் தரப்பில் எடுக்கத் தவறியதாக விசாரணையின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்கள் அந்தத் தண்டனையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம். பிணை அனுமதிக்கப்படும் வரை அவர்கள் விசாரணைக் காவலில் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்ற வழக்கிலிருந்து அந்த இரு அதிகாரிகளும் கடந்த 2022ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டிருந்தனர். ஆனால், அதனை எதிர்த்து அரசுத் தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீது சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு, வெள்ளிக்கிழமை (ஜூலை 31) அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக அந்த இரு அதிகாரிகளின் வழக்கறிஞரான சமிந்த அதுகோரலே தெரிவித்துள்ளார்.

இன்னும் வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று ஹோட்டல்களைக் குறிவைத்து 2019 ஏப்ரல் 21ஆம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தினக் குண்டுவெடிப்பில் 279 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 45 பேர் வெளிநாட்டினர். அந்தத் தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இலங்கையில் 1976ஆம் ஆண்டுக்குப் பிறகு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் இலங்கை நாடாளுமன்றத்தில் பகிரப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, 817 பேர் மரண தண்டனைக் கைதிகளாகச் சிறையில் உள்ளனர். அந்தத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்