கொழும்பு - இலங்கை அதிகாரிகள் இந்த மாதம் வெளிநாட்டினர் கடத்த 60 கிலோகிராம் எடையுடைய செயற்கை கஞ்சாவைப் பறிமுதல் செய்ததாக சனிக்கிழமை (மே 24) சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மூன்று வெவ்வேறு சம்பவங்களில் போதைப் பொருளைக் கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
அனைத்துலக போதைப் பொருள் கடத்தல் இடமாக கருதப்படும் இலங்கையில் பிரிட்டன், இந்தியா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள் பிடிபட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
21 வயது பிரிட்டிஷ் பெண் மே 12ஆம் தேதி கைதானார். அவருடைய பயணப் பெட்டிகளில் 46 கிலோகிராம் குஷ் போதைப் பொருள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
“அண்மை காலத்தில் கொழும்பில் முறியடிக்கப்பட்ட ஆகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் சம்பவம் இதுவாக இருக்கக்கூடும்,” என்று சுங்கத் துறை இயக்குநர் ஜெனரல் சீவலி அருக்கோடா தெரிவித்தார்.
பிரிட்டிஷ் ஊடகங்கள் கைதான பெண் ஷார்லட் மே லீ என்று அடையாளம் கண்டுள்ளது. லண்டனைச் சேர்ந்த முன்னாள் விமான சிப்பந்தியான அவர் தாய்லாந்திலிருந்து இலங்கைக்குச் சென்றார்.
போதைப் பொருள் பற்றி தமக்குத் தெரியாது என்ற பெண், பேங்காக் ஹோட்டலில் யாரோ அதைத் தமது பயணப் பெட்டியில் வைத்ததாகக் கூறினார்.
மே 16ஆம் தேதி, 33 வயது இந்திய ஆடவர் காங்கேசன்துறை துறைமுகத்தில் கைதானார். அவரிடம் 4 கிலோகிராம் குஷ் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 18), 21 வயது தாய்லாந்து ஆடவர் கொழும்பு விமான நிலையத்தில் தடுத்துநிறுத்தப்பட்டார். அவர் 8 கிலோகிராம் கஷ் போதைப்பொருளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.