கொழும்பு: இந்தியாவின் தென்பகுதியான தமிழ்நாட்டை நோக்கி நகரும் ‘ஃபெங்கல்’ புயல் இலங்கையைப் பதம்பார்த்து வருகிறது. அங்கு கனமழைப் பெய்துவரும் சூழலில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
வெள்ளநீரில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், காணாமல்போன நால்வரைத் தேடும் பணியில் இலங்கை மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளதாக அக்குழு வியாழக்கிழமை (நவம்பர் 28) தெரிவித்தது.
அந்நாட்டில் வசிக்கும் 250,000க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலைய அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
புதுச்சேரி கடலோரப் பகுதிகளையும் தமிழகத்தையும் ‘ஃபெங்கல்’ புயல் சனிக்கிழமை தாக்கலாம் என அதிகாரிகள் முன்னுரைத்தனர்.
இலங்கையில் கிட்டத்தட்ட 276,000 பேர் தற்காலிக வெள்ள நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்நாட்டு அரசாங்கம் வெள்ள மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு ராணுவத்தைக் கேட்டுக்கொண்டது.