தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை: செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல்

2 mins read
c6dc64bc-0a5c-4dc2-8c6c-fc9166430d52
இலங்கை அதிபர் தேர்தல் குறித்த அறிவிப்பு வெள்ளிக்கிழமை (ஜூலை 26) வெளியானது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

கொழும்பு: இலங்கையில் செப்டம்பர் 21ஆம் தேதி, புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பு நடைபெறவிருக்கிறது.

இலங்கை அரசாங்கம், வெள்ளிக்கிழமை (ஜூலை 26) இதனை அறிவித்தது.

பல்லாண்டுகளாக மோசமான நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் இலங்கையில் சீர்திருத்தத் திட்டங்களின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தலாக இந்த அதிபர் தேர்தல் கருதப்படுகிறது.

இதில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க இத்தேர்தலில் போட்டியிடுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

22 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கையில் கிட்டத்தட்ட 17 மில்லியன் பேர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

75 வயதாகும் விக்கிரமசிங்க, 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் அதிபராகப் பதவியேற்றார். அவருக்குமுன் பதவியிலிருந்த கோத்தபாய ராஜபக்ச, கடுமையான நிதி நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நாட்டை விட்டுத் தப்பியோடி, பின்னர் பதவி விலகினார்.

2019ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் வெற்றிபெற்று அவர் ஆட்சி அமைத்திருந்தார். திரு ராஜபக்ச பதவி விலகியதால் ஐந்தாண்டுத் தவணைக் காலத்தின் எஞ்சிய காலத்திற்கு அதிபராகப் பொறுப்பேற்க, திரு விக்கிரமசிங்கவை இலங்கை நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தது.

அனைத்துலகப் பண நிதியத்தின் $2.9 பில்லியன் நிதியுதவி மூலம் இலங்கையின் பொருளியலை அவர் மேம்படுத்தியுள்ளார். 2022 செப்டம்பரில் 70 விழுக்காடாக இருந்த பணவீக்க விகிதம் கடந்த ஜூன் மாதம் 1.7 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இலங்கையின் ரூபாய் நாணயம் வலுவடைந்துள்ளது. அந்நியச் செலாவணிக் கையிருப்பும் மேம்பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2024) இலங்கைப் பொருளியல் 3 விழுக்காடு வளர்ச்சி காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற உறுப்பினர் அனுரா குமார திசநாயக ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளனர்.

அனைத்துலகப் பண நிதியத் திட்டத்தின்கீழ் விதிக்கப்படும் அதிக வரிகள், நீண்டகாலம் தொடரும் பணவீக்கம், வேலைச் சந்தையில் தேக்கம் போன்றவற்றால் நாட்டின் மக்கள்தொகையில் கால்வாசிப் பேர் வறுமையால் துன்பப்படுகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், திரு பிரேமதாச, திரு திசநாயக இருவருமே தாங்கள் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இலங்கை மக்களை வாட்டும் வாழ்க்கைச் செலவினத்தையும் நாட்டின் கடன் சுமையையும் குறைக்கும் வகையில் அனைத்துலகப் பண நிதியத் திட்டத்தை மறுஆய்வு செய்வதில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்