கொழும்பு: ஈரான் போர் நீடித்தால் போதுமான எரிபொருள் இருக்காது என்ற அச்சத்தில் இலங்கை அரசாங்கம் வாரத்தில் நான்கு நாள் வேலை ஏற்பாட்டை அறிவித்துள்ளது.
எரிபொருளை மிச்சப்படுத்தும் நோக்கில் அறிவிக்கப்பட்ட அந்த நடைமுறை புதன்கிழமை (மார்ச் 18) முதல் நடப்பிற்கு வரும் என்று திங்கட்கிழமை அதிகாரிகள் கூறினர்.
ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்கத் தொடங்கி மூன்று வாரமாகிறது. இன்னும் மோதல் நீடிக்கிறது. தன் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து வழிகளை ஈரான் மூடிவிட்டது.
உலகின் எரிபொருள் தேவையில் ஏறத்தாழ 20 விழுக்காடு அந்த நீரிணை வழியாகத்தான் செல்ல வேண்டும்.
இந்நிலையில், இதே நிலை நீடித்தால் எரிபொருள் தட்டுப்பாடு வந்துவிடும் என்றெண்ணி, அரசு அலுவலகங்களில் நான்கு நாள் வேலைத் திட்டத்தை இலங்கையின் அத்தியாவசியச் சேவைத் துறைத் தலைமை ஆணையர் பிரபாத் சந்திகீர்த்தி அறிவித்துள்ளார்.
பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கும் இது பொருந்தும் என்றும் இந்த ஏற்பாடு காலவரம்பின்றி நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுப்பு தருமாறு தனியார் துறையினரையும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது,” என்று திரு சந்திரகீர்த்தி செய்தியாளர்களிடம் கூறினார்.
அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையில் அவசரநிலைக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் திரு சந்திரகீர்த்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இலங்கையில் அனைத்துவிதமான அரசாங்க நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேவை ஏற்படும் பட்சத்தில் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

