பொருளியல் சீர்திருத்த நடவடிக்கைகளை இலங்கை கட்டிக்காக்க வேண்டும்

2 mins read
அனைத்துலகப் பண நிதியம்
10d5d06d-ae5b-4645-940f-028c9083a28a
அனைத்துலகப் பண நிதியத்தின் ஆதரவால் இலங்கை அதன் பொருளியல் நெருக்கடியிலிருந்து மீண்டு வருகிறது. - படம்: ராய்ட்டர்ஸ்

இலங்கையின் பொருளியல் நிலைத்தன்மைக்கு அதன் சீர்திருத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து கட்டிக்காப்பது முக்கியம் என்று அனைத்துலகப் பண நிதியம் தெரிவித்துள்ளது. நிதியத்தின் அதிகாரிகள் அந்நாட்டுக்கு மேற்கொண்ட பயணத்தின் முடிவில் அந்தத் தகவலை வெளியிட்டனர்.

இலங்கை 2022ஆம் ஆண்டில் வரலாறு காணாத நெருக்கடியைச் சந்தித்தது. அப்போது அமெரிக்க டாலர் பற்றாக்குறை உச்சத்தில் இருந்தது. அதன் பின்னர் நிதியத்தின் US$2.9 பில்லியன் உதவித் திட்டத்தால் அந்நாடு சீராக மீட்படைந்து வருகிறது.

இலங்கையின் பொருளியல் 2024ல் 5 விழுக்காடு கூடியது. இவ்வாண்டின் பொருளியல் வளர்ச்சி 3.5 விழுக்காடாக இருக்கும் என்று உலக வங்கி முன்னுரைத்துள்ளது.

அமெரிக்கா 30 விழுக்காட்டு வரியை விதிக்கப்போவதாக இலங்கையை அச்சுறுத்தியுள்ளது. அது ஏறக்குறைய US$3 பில்லியன் பெறுமான ஏற்றுமதியைப் பாதிக்கக்கூடும் என்று இலங்கை கருதுகிறது. அமெரிக்காவின் புதிய வரி ஆகஸ்ட் மாதம் நடப்புக்கு வரவுள்ளது. அதற்கு முன்னர் வரி விகிதத்தைக் குறைக்க வா‌ஷிங்டனுடன் பேசி வருகிறது கொழும்பு.

அமெரிக்க வரிகளால் ஏற்படக்கூடிய அதிர்வலைகளை நிதியம் அதன் உதவித் திட்டத்தின் வழி சமாளிக்க எண்ணுகிறது.

இலங்கையின் வரவுசெலவுத் திட்டம் வரும் நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிதியாண்டின் நடுப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2.3 விழுக்காடாக வைத்திருக்க வரிகளின் மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்கவும் பொதுமக்களுக்குச் செலவிடும் தொகையைக் குறைக்கவும் வேண்டியிருக்கும் என்று நிதியம் குறிப்பிட்டது.

“நாணயக் கொள்கை கவனத்துடன் கையாளப்பட வேண்டும். பொருள்களின் விலையை நிலையாக வைத்திருப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்” என்று நிதியம் அதன் அறிக்கையில் தெரிவித்தது.

இலங்கை அதன் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து 7.75 விழுக்காடாக வைத்துள்ளது. அது அமெரிக்காவுடன் வரி குறித்துப் பேசிய பிறகு, வட்டி விகிதத்தை மேலும் தளர்த்த வாய்ப்பிருப்பதாக உலக வங்கி கூறியது.

குறிப்புச் சொற்கள்