தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கைக் கடற்பகுதியில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்ய அகதிகள் மீட்பு

1 mins read
9bfc0ecb-fc79-4e27-88cd-c58bd05e8855
மீட்கப்பட்ட ரோஹிங்ய அகதிகளில் 25 குழந்தைகளும் உள்ளதாக அதிகாரிகள் கூறினர். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: மீன்பிடிப் படகு ஒன்றில் மியன்மாரைச் சேர்ந்த 102 ரோஹிங்ய அகதிகளை இலங்கைக் கடற்படை அதிகாரிகள் மீட்டனர்.

அந்த 102 பேரில் 25 குழந்தைகளும் இருந்ததாக கடற்படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) கூறினர்.

மீட்கப்பட்ட அனைவரும் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்துக்கு பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டதாக கடற்படை பேச்சாளர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேலும், அகதிகள் அனைவருக்கும் உணவும் தண்ணீரும் தரப்பட்டதாக அவர் சொன்னார்.

நாட்டுக்குள் அவர்களை அனுமதிக்கும் முன்னர் அனைவரிடமும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டி உள்ளது என்றார் அவர்.

வன்செயல்கள் அதிகரிப்பதன் காரணமாக மியன்மாரில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் ரோஹிங்ய இனத்தைச் சேர்ந்த பெரும்பாலான முஸ்லிம்கள் ஏராளமான அளவில் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர்.

நீண்டதூரக் கடற்பயணம் மேற்கொண்டு ஏதேனும் ஒரு நாட்டுக்குள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

பெரும்பாலும் மலேசியா அல்லது இந்தோனீசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி அவர்கள் செல்கிறார்கள்.

இந்நிலையில், வியாழக்கிழமை (டிசம்பர் 19) இலங்கையின் வடக்குக் கடலோர முள்ளிவாய்க்கால் பகுதியில் மீன்பிடி இழுவைப் படகு ஒன்று தத்தளிப்பதை மீனவர்கள் கண்டனர்.

மியன்மாரின் தென்மேற்குக் கடற்பகுதியில் இருந்து ஏறத்தாழ 1,750 கிலோமீட்டர் பயணம் செய்து ரோஹிங்ய அகதிகள் இலங்கையில் தஞ்சம் புகுவது இது முதல்முறை அல்ல.

ஏற்கெனவே 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கடலோரம் ஒதுங்கிய படகு ஒன்றில் இருந்து 100க்கும் மேற்பட்ட ரோஹிங்ய அகதிகளை இலங்கை கடற்படை அதிகாரிகள் மீட்ட சம்பவம் நிகழ்ந்தது.

குறிப்புச் சொற்கள்