இலங்கை: எதிர்க்கட்சி அரசியல்வாதி சுட்டுக் கொலை

1 mins read
571ed00d-a39e-4d5e-8782-d3f894ffe6b0
திரு லசந்த விக்ரமசேகர. - படம்: எக்ஸ்/@lmThimira07

கொழும்பு: இலங்கையில் புதன்கிழமை (அக்டோபர் 22), எதிர்க்கட்சி அரசியல்வாதியான லசந்த விக்ரமசேகர சுட்டுக் கொல்லப்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 38.

கடலோர நகரான வெலிகமவில் அவர் ஆட்சிமன்றத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார்.

அவர் தொகுதி மக்களுடனான சந்திப்பில் இருந்தபோது அங்குச் சென்ற துப்பாக்கிக்காரர் கைத்துப்பாக்கியால் அவரை நோக்கிப் பலமுறை சுட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தில் வேறு யாருக்கும் காயமில்லை. துப்பாக்கிக்காரர் சம்பவ இடத்திலிருந்து தப்பிவிட்டார்.

தாக்குதலுக்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்று கூறிய காவல்துறை, விசாரணை நடைபெறுவதாகவும் தாக்குதல்காரரைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

திரு லசந்த, சமாகி ஜன பலவேகயா (SJB) கட்சியைச் சேர்ந்தவர். ஆளுங்கட்சிக்கும் அவரது கட்சிக்கும் இடையே ஆட்சிமன்ற அதிகாரத்தைக் கைப்பற்றுவதில் பனிப்போர் நடந்துவருகிறது.

இலங்கையில் இந்த ஆண்டு (2025) வன்முறைக் குற்றச்செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை போதைப்பொருள் கும்பல்களுடனும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுடனும் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. ஏறத்தாழ 100 துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் கிட்டத்தட்ட 50 பேர் மாண்டுவிட்டதாக அதிகாரபூர்வ தகவல்கள் கூறுகின்றன.

சென்ற ஆண்டு அதிபர் அனுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பிறகு இலங்கையில் அரசியல்வாதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறை. அதிபர் திசாநாயக்க, நாட்டில் சட்டம், ஒழுங்கை மீண்டும் நிலைநாட்ட உறுதிகூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

குறிப்புச் சொற்கள்