இலங்கையில் நாளை நாடாளுமன்றத் தேர்தல்: பெரும்பான்மை பெறவேண்டிய கட்டாயத்தில் அதிபர்

2 mins read
e0e7aa95-3b26-4ff6-bde3-6d2ba43f0c68
வாக்குப்பதிவுக்குத் தேவையான சாதனங்கள் காவல்துறை பாதுகாப்புடன் புதன்கிழமை (நவம்பர் 13) பேருந்துகள் மூலம் வாக்களிப்பு நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. - படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: இலங்கையில் நாளை (நவம்பர் 14) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தல் நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடைபெறுவதற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் நடப்பில் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் உள்ள 13,314 வாக்களிப்பு நிலையங்களில் வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நீடிக்கும்.

வாக்காளர் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வதற்குத் தேவையான சாதனங்கள் அனைத்தும் புதன்கிழமை அந்தந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைமை இயக்குநர் சாமன் ஸ்ரீரத்நாயக கூறினார்.

அந்தச் சாதனங்கள் மூலம் புதன்கிழமை காலை 7 முணி முதல் வாக்குப் பதிவு ஒத்திகை நடத்தப்பட்டதாகவும் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

ஏறத்தாழ 21 மில்லியன் மக்கள்தொகையைக் கொண்ட இலங்கையில் 17 மில்லியனுக்கும் மேற்பட்டோர் வாக்களிக்கத் தகுதிபெற்று உள்ளனர்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்து எடுப்பதற்கான இந்தத் தேர்தலின் பாதுகாப்புப் பணிகளில் கிட்டத்தட்ட 90,000 பேர் ஈடுபட உள்ளனர்.

225 உறுப்பினர்களில் 196 பேரை இலங்கை மக்கள் நேரடியாகத் தேர்ந்து எடுப்பர். எஞ்சிய 29 உறுப்பினர்கள் தேசிய பட்டியல் மூலமாகத் தேர்வுசெய்யப்படுவர். தேசிய பட்டியல் என்பது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளின் அடிப்படையில் அமையும்.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பெற ஒரு கட்சியோ கூட்டணியோ 113 இடங்களைப் பெறுவது அவசியம்.

அதிபர் அநுர குமார திசாநாயக்கவின் கட்சிக்கு, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்களே இருந்தனர்.

எந்தவொரு சட்டத்தையும் அதிபர் தன்னிச்சையாக இயற்ற இயலாத நிலையில், செப்டம்பர் 24ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் அதிபரின் தேசிய மக்கள் கூட்டணிக்குக் கிடைக்க வேண்டிய அறுதிப் பெரும்பான்மை எதிர்த்தரப்புக்குக் கிடைத்தால் அரசியல் குழப்பத்திற்கு அது இட்டுச் செல்லும்.

இலங்கை அதிபர்வசம் நிதி மற்றும் தற்காப்பு அமைச்சுகள் மட்டுமே இருக்கும் நிலையில் பிற அமைச்சுகள் அனைத்தும் நாடாளுமன்றக் கட்டுப்பாட்டின்கீழ் வரும்.

ஆளும் கட்சி பெரும்பான்மை பெறத் தவறினால், நாட்டின் முன்னேற்றத்திற்காக எந்த ஒரு திட்டத்தையும் வகுப்பதில் இழுபறியும் சிக்கலும் ஏற்படும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

ஒரு காலத்தில் அதிபர், பிரதமர், முன்னணி அமைச்சர்கள் என இலங்கை அரசாங்கத்தை ஆக்கிரமித்து இருந்த ராஜபக்சே குடும்பம், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பங்கேற்காமல் ஒதுங்கி நிற்பது குறிப்பிடத்தக்க அம்சம்.

அதேபோல, முன்னாள் அதிபரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, 1977ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

குறிப்புச் சொற்கள்