கொழும்பு: இலங்கையில் நடைபெற்ற இந்து சமயத் திருவிழாவின்போது யானை ஒன்று மதம் பிடித்து ஓடியதால் பீதியடைந்த கூட்டத்தினர் தப்பியோடியதில் சனிக்கிழமை (ஜூலை 6) 13 பேருக்குக் காயம் ஏற்பட்டது.
யானையைக் கட்டுப்படுத்த பாகன் ஒருவர் அதன் வாலைப் பிடித்து இழுப்பதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளி ஒன்று காட்டியது. அவ்வேளையில், வீதியில் வரிசையாகத் திரண்டிருந்த பக்தர்கள் உயிருக்கு அஞ்சி ஓட்டம் பிடித்தனர்.
சிவப்பு, நீலம், தங்க நிறங்களிலான அங்கிகள் அணிவிக்கப்பட்ட யானைகள் அணிவகுத்து நிற்பதைப் படங்கள் காட்டின.
தலைநகர் கொழும்பிலிருந்து 280 கி.மீ. தெற்கே கட்டரகாமா எனும் சிற்றூரில் நடைபெற்ற இத்திருவிழாவின்போது லேசாகக் காயமடைந்த 13 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகக் காவல்துறை ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 7) கூறியது.
காயமுற்ற அனைவரும் சிகிச்சை முடிந்து வசிப்பிடம் திரும்பியதாக மருத்துவமனைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

