கொழும்பு: தேசிய மின்விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இலங்கை முழுவதும் சனிக்கிழமை (அக்டோபர் 17) மின்தடை ஏற்பட்டது
தேவைக்குமேல் சூரியமின் உற்பத்தி அதிகரித்ததால் இந்த மின்வெட்டு ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.
மின்விநியோகம் எப்போது சீரமைக்கப்படும் என்பது குறித்து தகவல் இல்லை.
ஆனால், இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நாடு முழுவதும் மின்சாரம் இன்றி முடங்கியது.
முழு மின்கட்டமைப்பையும் பாதித்துள்ள கோளாற்றைச் சரிசெய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் உபரி சூரியமின் உற்பத்தியே இந்த முடக்கத்திற்குக் காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகவும் அரசுக்குச் சொந்தமான ‘எலக்ட்ரிசிட்டி டிஸ்ட்ரிபியூஷன் லங்கா’ தெரிவித்தது.
மின்சார விநியோகத்தைக் கட்டம் கட்டமாக மீட்டெடுப்பதற்கு அதிகாரிகள் தீவிரமாக முயன்று வருகின்றனர் என்று எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்தார்.
“சீரமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் மேற்கூரைச் சூரிய மின்சக்தி அமைப்புகளை வைத்துள்ள உரிமையாளர்கள் மறுஅறிவிப்பு வரும் வரை தங்கள் அமைப்புகளின் இணைப்பைத் துண்டிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
தேவைக்கு அதிகமாக சூரிய மின்சக்தி உற்பத்தி அதிகரித்ததால் பிப்ரவரி 2025ல் நாடு முழுவதும் உள்ள மின்கட்டமைப்பு செயலிழந்தது. அப்போது மின்விநியோகத்தை மீட்டெடுக்க ஆறு மணி நேரத்திற்கும் மேலானது.
இலங்கையில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் 3,000 மெகாவாட்டிற்கும் சற்று அதிகமாக உள்ளது. அதேவேளையில், பகல்நேரத்தில் 2,000 மெகாவாட் முதல் 2,500 மெகாவாட் வரையில்தான் மின்சாரம் தேவைப்படுகிறது.
