தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு

2 mins read
51a4a497-c67c-4321-a6b4-7f2afe9b5ceb
இலங்கைப் பொதுத் தேர்தல் நவம்பர் மாதம் 14ஆம் தேதி நடைபெறும் என்று அதிபர் அனுர குமார திசாநாயக்க (நடுவில்) அறிவித்துள்ளார். - படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: இலங்கையின் புதிய அதிபராகப் பதவியேற்றிருக்கும் அனுர குமார திசாநாயக்க, அந்நாட்டு நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார்.

அந்நடவடிக்கை இலங்கையில் திடீர் பொதுத் தேர்தல் நடைபெற வழிவகுத்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 24) இலங்கை அரசிதழில் இந்த அறிவிப்பு வெளியானது.

நாடாளுமன்றத் தேர்தல் வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று அச்செய்தி தெரிவித்தது. அடுத்த நாடாளுமன்ற அமர்வு நவம்பர் மாதம் 21ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இலங்கையின் ஆகக் கடைசியாக பொதுத் தேர்தல் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. அந்நாட்டில் பொதுத் தேர்தல் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

இலங்கையில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கொள்கைகளைக் கொண்ட திரு திசாநாயக்க வெற்றிபெற்றார். பெரும் நிதி நெருக்கடியை எதிர்கொண்ட இலங்கையின் நிலைமையை மேம்படுத்துவதில் திரு திசாநாயக்க முக்கியப் பங்கு வகிப்பார்.

இலங்கை தற்போது நிதி நெருக்கடியிலிருந்து படிப்படியாக மீண்டு வருகிறது.

திரு திசாநாயக்கவின் கட்சி இடம்பெறும் தேசிய மக்கள் சக்திக் கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். அதனால் தமது கொள்கைகளைச் செயல்படுத்துவதை எளிதாக்க நாடாளுமன்றத்தில் கூடுதல் ஆதரவு பெறும் நோக்கில் அவர் நாடாளுமன்றத்தைக் கலைத்துள்ளார்.

2022ஆம் ஆண்டில் இலங்கைப் பொருளியல் சரிந்தது. அதற்குப் பிறகு, கடந்த 21ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தல்தான் அந்நாட்டின் நடந்த முதல் தேர்தலாகும்.

2022ல் எழுந்த பொருளியல் நெருக்கடியால் எரிபொருள், மருந்து, சமையல் எண்ணெய் போன்ற முக்கிய இறக்குமதிப் பொருள்களுக்கு இலங்கையால் கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனையடுத்து, இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களால் அப்போது அதிபராகப் பதவி வகித்த கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டுத் தப்பியோடி பதவி விலகினார்.

நிலைமையைக் கையாள மாற்றங்களைக் கொண்டுவரப்போவதாக திரு திசாநாயக்க, பொருளியல் நெருக்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு உறுதியளித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்