தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

‘ஊழல் நாடு’ என்ற கண்ணோட்டத்தை மாற்றியமைக்க இலங்கை அதிபர் சூளுரை

1 mins read
3210c6ab-7f19-4234-b843-aa8d4e304364
இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, கொழும்பில் உள்ள சுதந்திரச் சதுக்கத்தில் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, அந்நாட்டின் மீது படிந்துள்ள ‘ஊழல் நாடு’ என்ற கண்ணோட்டத்தை மாற்றியமைக்கச் சூளுரைத்துள்ளார்.

கொழும்பில் பிப்ரவரி 4ஆம் தேதி நடைபெற்ற இலங்கையின் சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது அவர் அவ்வாறு கூறினார்.

இலங்கை அதன் 77ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை எளிமையான முறையில் கொண்டாடியுள்ளது. ராணுவ அணிவகுப்புகளுடன் வழக்கமாகப் பெரிதாக நடைபெறும் கொண்டாட்டத்தை அதிபர் திசாநாயக்க தவிர்த்துவிட்டார்.

அரசாங்கச் செலவினங்களைக் குறைக்க அதிபர் உறுதியளித்ததற்கேற்ப சிறிய அளவிலான ராணுவ அணிவகுப்பு மட்டுமே இடம்பெற்றது.

திரு திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், “உலக அரங்கில் ஊழல் மிக்க அரசாங்கத்தைக் கொண்ட நாடாக அறியப்படும் இலங்கை குறித்த கண்ணோட்டத்தை மாற்றுவதற்குக் கடப்பாடு கொண்டுள்ளோம்,” என்றார்.

“கடந்த கால ஊழல் அரசியல் கட்டமைப்பின் தவறுகள் ஆழ வேரூன்றியிருந்தாலும், எண்ணற்ற தடைகளைச் சந்தித்தாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தப் புதிய அரசாங்கம் நிலையான வேகத்தில் முன்னேறிச் செல்கிறது,” என்று அவர் கூறினார்.

கடந்த நான்கு மாதங்களில் நிலையான பொருளியலுக்கான அடித்தளத்தைத் தமது அரசாங்கம் அமைத்திருப்பதாகக் கூறிய திரு திசாநாயக்க, புதிய அரசியல் கலாசாரத்தைத் தாங்கள் அறிமுகப்படுத்தியுள்ளதாகச் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்