கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட 39 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்து உள்ளனர்.
நிதி நெருக்கடியில் சிக்கியதால் நிமிர்ந்து நிற்கப் போராடி வரும் இலங்கையில் செப்டம்பர் 21ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
பொருளியல் சீரழிந்து, அந்நியச் செலாவணி ஒட்டுமொத்தமாகக் காலியாகிவிட்ட பின்னர் இலங்கையில் நடைபெறக்கூடிய முதல் பெரிய தேர்தல் இது.
2022ஆம் ஆண்டு பொருளியல் கடுமையாகச் சரிந்ததன் காரணமாக நாடு கடனில் மூழ்கி தத்தளித்தது.
நாட்டை ஆண்டவர்களே அதற்குக் காரணம் என்று கூறி சினம் கொண்டு எழுந்த மக்கள், வீதிகளில் இறங்கி போராடினார்கள். வன்முறை வெடித்தது. வேறு வழியின்றி அதிபர் பதவியைக் கைவிட்டு நாட்டைவிட்டே ஓடினார் கோத்தபய ராஜபக்சே.
2022 ஜூலையில் ரணில் விக்ரமசிங்க, 75, நாடாளுமன்றத்தால் அதிபராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார். அப்போது முதல் பொருளியல் நிலவரங்களை ஓரளவு சமாளித்து வரும் அவரும் தற்போது தேர்தலில் போட்டியிடுகிறார்.
அவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மார்க்சியத்தைத் தழுவிய நாடாளுமன்ற உறுப்பினரான அனுர குமார திசநாயக ஆகியோரும் முதல்நிலை வேட்பாளராகக் களத்தில் உள்ளனர்.
வியப்பளிக்கும் விதமாக முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் 38 வயது மூத்த மகன் நாமல் ராஜபக்சேவும் தேர்தல் களத்தில் குதித்து உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அவர் சார்ந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தற்போதைய நாடாளுமன்றத்தில் ஆகப் பெரிய கட்சியாக உள்ளது.
பௌத்த பிக்குகள் இருவரும் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
40 பேர் வேட்பு மனுக்களைப் பெற்றுச் சென்றபோதிலும், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) 39 பேர் மட்டுமே தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் சென்று தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
42 ஆண்டு கால இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமானோர் வேட்பு மனு தாக்கல் செய்திருப்பது இதுவே முதல்முறை.
22 மில்லியன் மக்கள் வாழும் இலங்கையில் ஏறக்குறைய 17 மில்லியன் பேர் அதிபர் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்று உள்ளனர்.
இந்நிலையில், அதிபர் தேர்தலை அமைதியாக நடத்த ஒத்துழைக்குமாறு பல்வேறு தரப்பினருக்கு இலங்கை தேர்தல் ஆணையத்தின் தலைவர் ஆர்.எம். ரத்னாயக அழைப்பு விடுத்து உள்ளார்.
“தேர்தல் அமைதியாகவும் வெளிப்படையாகவும் நடைபெற அரசியல் கட்சிகள், ஊடகங்கள், மக்கள்நல அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என தேர்தல் ஆணையம் நம்புகிறது,” என்றார் அவர்.