கொழும்பு: இவ்வாண்டின் இலங்கை அதிபர் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்களின் பிரசாரம் புதன்கிழமையன்று (செப்டம்பர் 18) நிறைவடைந்தது.
இலங்கை அதிபர் தேர்தல் வரும் சனிக்கிழமைன்று (செப்டம்பர் 21) நடைபெறவுள்ளது. அந்நாளில் 17 மில்லியனுக்கும் அதிகமான இலங்கை மக்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான அதிபரைத் தேர்ந்தெடுக்க வாக்களிப்பர்.
பல ஆண்டுகளாகக் காணப்படாத வகையில் இலங்கைப் பொருளியல் சரிந்ததற்குப் பிறகு நடைபெறவுள்ள முதல் தேர்தல் இது. இலங்கையின் அதிபர் தேர்தல் வேட்பாளர்கள், மிக மோசமான நிலையில் இருக்கும் அந்நாட்டின் பொருளியலை மீட்கப்போவதாக உறுதியளித்துள்ளனர்.
நிலைமையைச் சமாளிக்க அனைத்துலகப் பண நிதியம், இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் (S$3.7 பில்லியன்) தொகையைக் கடனாக அளித்தது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பொருளியல் ஓரளவு மீண்டது.
இவ்வாண்டு இலங்கையின் பொருளியல் மூன்று விழுக்காடு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடனைத் திரும்பத் தரும் 12.5 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டத்தை உறுதிசெய்ய அந்நாடு, கடன் பத்திரதாரர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, மார்க்சிஸ்ட் கொள்கைகளைக் கொண்ட அனுர குமார திசநாயக, தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் சஜித் பிரேமதாசா ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
தேர்தல் முடிவுகளைப் பொது இடங்களில் ஒளிபரப்பத் தடை
இதனிடையே, அதிபர் தேர்தல் முடிவுகளைப் பொது இடங்களில் ஒளிபரப்புவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு பொது இடங்களில் ஒளிபரப்பும்போது வன்முறை வெடிக்கலாம் என்பதால் அதனைத் தடுக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறைப் பேச்சாளரும் துணைத் தலைமை ஆய்வாளருமான நிகால் தல்துவா கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி அதிபர் தேர்தல் முடிவுகளைக் காணும்படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, தேர்தலுக்கு முதல்நாளான வெள்ளிக்கிழமையும் (செப்டம்பர் 20) நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
பள்ளிகள் மீண்டும் திங்கட்கிழமையன்று (செப்டம்பர் 23) திறக்கப்பட்டு, வழக்கம்போல் வகுப்புகள் செயல்படும்.
வாக்குச்சாவடிகளாகச் செயல்படும் பள்ளிகள், வியாழக்கிழமை பள்ளி நேரம் முடிந்ததும் வாக்குப்பதிவிற்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.