கொழும்பு: தன் கடல்பகுதியில் தவித்துக்கொண்டிருந்த இரண்டாவது ஈரானியக் கப்பலுக்கு இலங்கை உதவிக்கரம் நீட்டியுள்ளது.
மனிதநேய உதவியின் அடிப்படையில் கப்பல் ஊழியர்கள் தரையிறக்கப்படுவார்கள் என்றும், கப்பல் திருகோணமலைத் துறைமுகத்திற்கு மாற்றப்படும் என்றும் இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஈரானியக் கப்பலான ‘ஐரிஸ் புஷெர்’ (IRIS Bushehr) ஊழியர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டு, பின்னர் திருகோணமலைத் துறைமுகத்திற்கு பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுவர் என்று அவர் கூறினார்.
அவ்வகையில், அக்கப்பலில் இருந்த 208 ஊழியர்களையும் இலங்கைக் கடற்படை பாதுகாப்பாக மீட்டது.
முதலில் அவர்களுக்கு மருத்துவச் சோதனை மேற்கொள்ளப்படும். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட தேவைகளை இலங்கை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்.
அந்த ஈரானியக் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாகச் சமூக ஊடகங்களில் வெளியான தகவலில் உண்மையில்லை என்று அதிபர் திசாநாயக்க தெளிவுபடுத்தினார்.
இயந்திரக் கோளாறு ஏற்பட்ட அந்தக் கப்பலுக்கு உதவி வழங்க, ஈரானிய வெளியுறவு அமைச்சுடனும் தூதரகத்துடனும் நடத்திய ஆலோசனைகளுக்குப் பிறகு, அனைத்துலக உடன்படிக்கைகளின்படி இலங்கை ஒப்புக்கொண்டதாக அவர் வியாழக்கிழமை (மார்ச் 5) இரவு தேசியத் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையிலான சண்டையில் இலங்கை நடுநிலை வகுக்கும் என்றும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இலங்கைக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய தாக்குதலில் ஈரானியப் போர்வீரர்கள் சென்ற ‘ஐரிஸ் தேனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சில நாள்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது.
அக்கப்பலில் இருந்த 32 கடலோடிகள் மீட்கப்பட்டனர்; நூற்றுக்கும் மேற்பட்டோரைக் காணவில்லை அல்லது உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று மேற்பரப்புக் கப்பலைத் தாக்கியது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

