கொழும்பு: அடுத்த ஆண்டிற்குள் இலங்கை ராணுவப் படையினரின் எண்ணிக்கை 135,000ஆகக் குறைக்கப்படும் என்று அந்நாட்டு அமைச்சர் பிரேமித பண்டார தென்னகூன் தெரிவித்ததாக 'டெய்லி மிரர்' செய்தி கூறுகிறது.
இப்போது 200,783 பேர் இலங்கை ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் ராணுவப் படையினரின் எண்ணிக்கையை 100,000ஆகக் குறைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று திரு தென்னகூன் குறிப்பிட்டார்.
"ராணுவ வலிமையும் நீடித்து நிலைக்கத்தக்க பொருளியல் வளர்ச்சியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். அவை இரண்டும் சேர்ந்தே இருக்கும்," என்றார் அவர்.
2030ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப ஆற்றலும் போர்த்திறமும் மிக்க, சமநிலையுடன் கூடிய தற்காப்புப் படையை உருவாக்குவதே இலக்கு என்றும் அமைச்சர் தென்னகூன் குறிப்பிட்டார்.

