கொழும்பு: அதிபர் மாளிகையிலிருந்து களவாடப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க புதையல்களைத் திரும்பத் தருவோருக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்படும் என்று இலங்கை கூறியிருக்கிறது.
ஓராண்டுக்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகையினுள் அத்துமீறி நுழைந்ததைத் தொடர்ந்து, முன்னாள் தலைவர் கோத்தபயா ராஜபக்சே அங்கிருந்து தப்பிச் செல்லவேண்டியிருந்தது.
பிரிட்டனிடமிருந்து 1948ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற பிறகு இலங்கை எதிர்நோக்கும் ஆக மோசமான பொருளியல் நெருக்கடியின் தொடர்பில் பல மாதங்களாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்ற ஆண்டு ஜூலை 9ஆம் தேதியன்று ஆயிரக்கணக்கானோர் அதிபர் மாளிகையினுள் அத்துமீறி நுழைந்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு மதிப்புமிக்க கலைப்பொருள்களும் தொல்பொருள்களும் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தப் பொருள்களை ஒரு மாதத்திற்குள் திரும்பக் கொடுத்தால் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
ஓராண்டுக்கு முன்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட பின்னர், அவர்கள் அதிபர் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக நீந்தியதையும் படுக்கையில் துள்ளிக் குதித்ததையும் சமூக ஊடகப் பதிவுகள் காட்டின.
திரு ராஜபக்சே, மாளிகையின் பின்புறத்திலிருந்து தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பின்வாங்கிய பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் மதிப்புவாய்ந்த கலைப்பொருள்களுடன் படம் பிடித்துக்கொண்டனர்.
தொடர்புடைய செய்திகள்
திரு ராஜபக்சே ஊழல் புரிந்ததாகவும், நாட்டின் நிதியைத் தவறாக நிர்வகித்ததாகவும் ஆர்ப்பாட்டக்கார்கள் குறைகூறினர்.


