கொழும்பு: ஒன்பது நாள்களுக்கு முன்னர், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலால் ஈரானியப் போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டபோது உயிரிழந்த ஈரானியக் கடலோடிகள் 84 பேரின் சடலங்களை வெள்ளிக்கிழமை (மார்ச் 13) தாயகத்திற்குத் திருப்பி அனுப்பவுள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக் கடற்பகுதிக்கு அருகில், ‘ஐரிஸ் தேனா’ (IRIS Dena) என்ற அந்தப் போர்க்கப்பல், கடந்த மார்ச் 4ஆம் தேதி மூழ்கடிக்கப்பட்டபோது, அந்தக் கடலோடிகள் உயிரிழந்தனர்.
அந்தச் சம்பவம், மத்திய கிழக்குப் போர் இந்தியப் பெருங்கடல்வரை பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதைக் காட்டியது.
“உள்நாட்டுச் செயல்முறைகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளன. சடலங்களை எடுத்துச்செல்ல, ஈரானியர்கள் தனியார் விமானத்தைக் கொண்டுவருகின்றனர்,” என்று பேச்சாளர் துஷாரா ரோட்ரிகோ ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
“நமது கடற்படையால் மீட்கப்பட்ட கடலோடிகள் 32 பேரும் தொடர்ந்து இலங்கையில் இருப்பார்கள்,” என்றார் அவர்.
“காயமடைந்த கடலோடிகள் தொடர்பாக, அனைத்துலகச் செஞ்சிலுவைச் சங்கத்தின் குழு தொடர்புகொள்ளப்பட்டது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் சடலங்களைத் தாயகத்திற்குத் திருப்பி அனுப்பும் பணியில் அவர்கள் ஈடுபடவில்லை,” என்று திரு ரோட்ரிகோ தெரிவித்தார்.
‘ஐரிஸ் தேனா’ போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட மறுநாளே, ஈரானின் இரண்டாவது போர்க்கப்பலான ‘ஐரிஸ் புஷெஹ்ர்’ (IRIS Bushehr) இலங்கைக் கடற்பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டது.
அந்தக் கப்பலுக்கும் அதிலுள்ள 219 பேருக்கும் இலங்கை தற்போது பாதுகாப்பு அளித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

