இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 23 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது. தேயிலை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் உரத்திற்குத் தடைவிதிப்பு, உக்ரேனில் நிலவும் போர் போன்றவை இதற்குக் காரணங்களாக உள்ளன.
இலங்கையின் ஆகப்பெரிய ஏற்றுமதிப் பொருளாக தேயிலை விளங்குகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 1.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வருவாயை அது பெற்றுத் தந்தது. ஆனால், இலங்கையில் நிலவிவரும் தற்போதைய பொருளியல் நெருக்கடி, தேயிலை ஏற்றுமதிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேயிலை சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் உரம் இறக்குமதிக்கு கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட தடை, தேயிலை அறுவடை செய்வோரைப் பெரிதும் பாதித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் இவ்வாண்டு பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் தேயிலை உற்பத்தி ஆண்டு அடிப்படையில் 18 விழுக்காடு சரிந்தது.
இவ்வாண்டின் முதல் காலாண்டில் தேயிலை ஏற்றுமதி 63.7 மில்லியன் கிலோகிராமாக குறைந்தது. ஒப்புநோக்க, கடந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் ஏற்றுமதி 69.8 மில்லியன் கிலோகிராமாக இருந்தது.
1999ஆம் ஆண்டு முதல் காலாண்டிற்குப் பிறகு, தேயிலை ஏற்றுமதி இந்த அளவுக்குக் குறைந்திருப்பது இதுவே முதன்முறை. 1999ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 60.3 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது.


