கொழும்பு: இலங்கையில் ரயில் தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் யானைகள் மீது மோதியது.
அதையடுத்து, அந்த ரயில் தடம்புரண்டது.
சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஆனால் ஆறு யானைகள் மடிந்ததாக இலங்கைக் காவல்துறை கூறியது.
இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) அதிகாலை நிகழ்ந்தது.
தலைநகர் கொழும்புவிலிருந்து கிட்டத்தட்ட 180 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹபரனா பகுதியில், வனவிலங்கு காப்பகம் அருகில் அந்த விரைவுரயில் சென்றுகொண்டிருந்தபோது இத்துயரச் சம்பவம் நிகழ்ந்தது.
ரயில் மோதியதில் காயமடைந்த இரண்டு யானைகளுக்கு வனவிலங்குத் துறை அதிகாரிகள் சிகிச்சை அளித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
விபத்துக்குப் பிறகு காயமடைந்த யானைக் கன்றுக்குக் காவலாக இன்னொரு யானை தண்டவாளத்துக்கு அருகில் நின்றுகொண்டிருந்ததைக் காட்டும் காணொளி இணையத்தில் வலம் வந்தது.
தொடர்புடைய செய்திகள்
காயமடைந்த யானைக் கன்றுக்கு ஆதரவாகவும் ஆறுதல் வழங்கும் வகையிலும் அந்த இன்னொரு யானை அதன் தும்பிக்கையைத் தனது தும்பிக்கையால் பற்றிக்கொண்டதைக் காட்டும் காட்சி பார்ப்போர் மனதை நெகிழ வைத்தது.
யானைகளைக் கொல்வது இலங்கையில் குற்றமாகும்.
அந்நாட்டில் ஏறத்தாழ 7,000 யானைகள் உள்ளன.
யானைகளைத் தேசிய பொக்கிஷமாக இலங்கை கருதுகிறது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கையின் சுற்றுப்புற துணை அமைச்சர் ஆண்டன் ஜெயக்கொடி கூறினார்.
யானைகள் தண்டவாளத்துக்குச் செல்ல முடியாதபடி மின்சார வேலிகள் போன்ற தடுப்புகள் அமைக்கப்படக்கூடும் என்றார் அவர்.