இலங்கையின் எரிசக்தி அமைச்சர் பதவி விலகல்

நிலக்கரி ஊழல் விவகாரம்:

இலங்கையின் எரிசக்தி அமைச்சர் பதவி விலகல்

1 mins read
5007f9b3-8999-459c-aec1-1b6376545805
இலங்கையின் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி, ஊழல் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பதவி விலகியிருக்கிறார். - படம்: ராய்ட்டர்ஸ்

கொழும்பு: இலங்கையின் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியும் அமைச்சரவைச் செயலாளர் உதயங்க ஹேமபாலவும் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) பதவி விலகியுள்ளனர்.

மின்சார உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ததில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்ததாகச் சந்தேகிக்கப்படுவதன் தொடர்பில் புலனாய்வை மேற்கொள்ள ஏதுவாகத் திரு ஜெயக்கொடி பதவி விலகியிருப்பதாக அதிபரின் ஊடக அலுவலக அறிக்கையொன்று தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை காலையில் பதவி விலகல் கடிதங்கள் அதிபர் அனுர குமார திசநாயக்கவிடம் கொடுக்கப்பட்டன.

ஊழல் குற்றச்சாட்டுகளின் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருப்பது இதுவே முதன்முறை. அவருக்கு எதிராகச் சென்ற வாரம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

மின் உற்பத்திக்காக 2009ஆம் ஆண்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி தொடர்பான தகவல்களை முழுமையாக விசாரிக்குமாறு திரு திசநாயக்க உத்தரவிட்டுள்ளார். அரசாங்கத்தின் லக்விஜய மின்னாலையின் மின் உற்பத்தியைத் தரம் குறைந்த நிலக்கரி பாதித்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இலங்கையின் மின்சாரத் தேவையில் ஏறக்குறைய 40 விழுக்காட்டை வழங்குவதற்கு அந்த மின்னாலைக்கு ஆண்டுதோறும் ஏறக்குறைய 2.25 மில்லியன் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. இம்மாதம் வெளியிடப்பட்ட சிறப்புக் கணக்குத் தணிக்கை அறிக்கையில் அந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

குறிப்புச் சொற்கள்