இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி கைது

இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி கைது

1 mins read
ad1c13c9-486f-450a-b257-28da17b2c032
போர்க் குற்றச்சாட்டுகளையும் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட எதிர்கொண்டுள்ளார்.  - படம்: ஏஎஃப்பி

கொழும்பு: இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட வெள்ளிக்கிழமை (ஜூலை 3) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகனைச் சட்டவிரோதமாகக் கடற்படையில் சேர்க்கவும் வெளிநாடுகளுக்கு அனுப்பிப் பயிற்சி பெறவும் அவர் உதவியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

தேவையான தகுதிகள் இல்லாத நிலையில், 2006ஆம் ஆண்டு யோஷித ராஜபக்சவைக் கடற்படையில் சேர்த்தது தொடர்பாக 73 வயது அட்மிரல் கரன்னாகொடவை லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணையம் தடுப்புக்காவலில் வைத்துள்ளது.

இலங்கையில் பல்லாண்டாக நீடித்த தமிழ்ப் பிரிவினைவாதப் போர் 2009ல் முடிவுக்கு வந்தபோது, கடற்படைத் தளபதியாக இருந்தவர் கரன்னாகொட. 2019ல் அவர் கடற்படைத் தலைமைத் தளபதியாகப் பதவி உயர்வு பெற்றார். தற்போது அவருக்குக் கடற்படையில் எந்தவொரு முக்கியப் பொறுப்பும் இல்லை.

பிரிட்டனின் புகழ்பெற்ற டார்ட்மவுத் கடற்படைக் கல்லூரியில் பயிற்சி பெறப் பொதுப் பணத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் 38 வயது யோ‌ஷித ராஜபக்ச சென்ற மாதம் கைதுசெய்யப்பட்டார். இப்போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

போர்க் குற்றச்சாட்டுகளையும் கரன்னாகொட எதிர்கொண்டுள்ளார்.

கடுமையான மனித உரிமை மீறல்களையும் சட்டவிரோதக் கொலைகளையும் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, சென்ற ஆண்டு மார்ச்சில் பிரிட்டன் அவர்மீது தடைகளை விதித்தது.

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த பலரும் அவர்களின் நெருங்கிய சகாக்களும் பல்லாண்டாகப் பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவை அனைத்தும் நீதிமன்றங்களின்முன் நிலுவையில் உள்ளன.

குறிப்புச் சொற்கள்
இலங்கைகடற்படைதளபதிகைது