கொழும்பு: நிமிடத்துக்கு 0,000 லீட்டர் நீரைத் தொடர்ச்சியாகப் பெறக்கூடிய நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
அந்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்ட நிலத்தடி நீர் ஊற்றுகளில் இது மிகப் பெரியது என்று கூறப்படுகிறது.
காலி - தெனியாய பிரதான வீதியில், பிட்டபெத்தர காவல் நிலையத்திற்கு அருகில் இந்த ஊற்று கண்டறியப்பட்டதாக தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்புச் சபையின் தென் மாகாணத்திற்கான புவியியலாளர் இந்திரஜித் கமகேய தெரிவித்துள்ளார்.
“குழாய் கிணறு அமைப்பதற்காக அகழ்வுப் பணியின்போது, நிமிடத்திற்கு 10,000 லீட்டர் நீரைத் தொடர்ச்சியாகப் பெறக்கூடிய இந்த ஊற்று கண்டறியப்பட்டது.
“இலங்கையில் இவ்வளவு பெரிய நீர் ஊற்று கண்டறியப்படுவது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் ‘மடு’ பகுதியில் கண்டறியப்பட்ட நீர் ஊற்றே மிகப்பெரியதாகக் கருதப்பட்டது, தற்போது அந்தச் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார்.
பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அவற்றுக்கிடையேயான இடைவெளிகள் ஊடாக நிலத்தடி நீர் தேங்கியிருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் துல்லியமாகக் கண்டறிந்து இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

