இலங்கைத் தேயிலைத் தொழில் பெரும் பாதிப்பு

இலங்கைத் தேயிலைத் தொழில் பெரும் பாதிப்பு

2 mins read
d2f3ab1f-c07c-4124-9cf8-b6232f3d5256
இலங்கையின் மத்திய பகுதியில் ஏறத்தாழ 2.4 மில்லியன் பேர், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.92 பில்லியன்) மதிப்பிலான தேயிலைத் தொழிலையே நம்பியுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்
Google News Preferred Icon

கொழும்பு: மத்திய கிழக்கில் நிலவிவரும் போர் காரணமாக, இலங்கையின் முக்கிய வாழ்வாதாரத் தொழிலான தேயிலைத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நாட்டின் பொருளியல் நெருக்கடி மேலும் அதிகரித்துள்ளதோடு, மில்லியன்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

இலங்கையின் மத்திய மலைப்பகுதியில் தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள ஏறத்தாழ 2.4 மில்லியன் பேர், 1.5 பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.92 பில்லியன்) மதிப்பிலான இந்தத் தேயிலைத் தொழிலையே நம்பியுள்ளனர். தற்போதைய சூழலில் எரிசக்தி விலையேற்றத்தால் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்த முடியாமல், விறகுகளைப் பயன்படுத்தும் நிலைக்குத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

ஆண்டுக்கு ஏறத்தாழ 680 அமெரிக்க டாலர் மதிப்பிலான இலங்கையின் புகழ்பெற்ற ‘சிலோன் டீ’ ஏற்றுமதியில் பாதியளவிலான தேயிலை மத்திய கிழக்கு நாடுகளுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது. அங்கு ஏற்பட்டுள்ள போர்ச் சூழலின் நேரடித் தாக்கத்தை இத்தொழிலாளர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள் தற்போது நாளொன்றுக்கு 1,350 முதல் 1,750 இலங்கை ரூபாய் வரை மட்டுமே ஊதியமாகப் பெறுகின்றனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உலக வங்கியின் நடுத்தரக் குறைந்த வருவாய்க்கான வறுமைக் கோட்டின் கீழ்தான் வாழ்கின்றனர்.

தோட்டத் தொழிலாளர்கள் அடுத்தடுத்துப் பல கடுமையான நெருக்கடிகளைத் தொடர்ந்து சந்தித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ளார் தோட்டத் தொழிலாளர்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு தங்கவேல் கணேசலிங்கம்.

இலங்கையின் முன்னணித் தேயிலை நிறுவனமான ‘டில்மா’, தனது மொத்த வணிகத்தில் 30 விழுக்காட்டை மத்திய கிழக்கு வட்டாரத்திலிருந்து பெற்று வருகிறது.

தற்போதைய சூழலில் அங்கு ஏற்பட்டுள்ள கப்பல் போக்குவரத்து, தளவாட இடையூறுகள் காரணமாக, அந்நிறுவனம் தற்போது கனடா, தென்னமெரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற மாற்றுச் சந்தைகளில் தனது வணிகத்தை விரிவுபடுத்தும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
இலங்கைதேநீர்தொழிலாளர்