கொழும்பு: இலங்கையில் 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளியல் சரிவின் கோர வடுக்கள் மீண்டும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.
மத்திய கிழக்குப் போர், கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டைப் புரட்டிப் போட்ட ‘டிட்வா’ புயல் ஆகியவற்றின் கூட்டு விளைவால், இலங்கை மீள முடியாத நெருக்கடியில் சிக்கியுள்ளது.
அதிபர் அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசு, எரிபொருளுக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளதோடு, அதன் விலையை மூன்றில் ஒரு பங்கு உயர்த்தியுள்ளது. மின்சாரக் கட்டணமும் 40 விழுக்காடு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் தட்டுப்பாட்டைத் தொடர்ந்து, தற்போது நீர் விநியோகத்திற்கும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2024 தேர்தலில் அனுர குமாரவின் கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு வழங்கியிருந்தாலும், தற்போதைய பொருளியல் நெருக்கடியை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. “நல்ல காலம் பிறக்கும் என்று வாக்களித்தோம், ஆனால் நாடு இன்னும் ஆழமான படுகுழியில் விழுவதையே உணர முடிகிறது,” என்று கொழும்பு பெட்டா சந்தை வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
டிட்வா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், நிவாரண முயற்சிகள்
மறுபுறம், 641 உயிர்களைப் பலிவாங்கிய ‘டிட்வா’ புயலால் கிட்டத்தட்ட 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. சீரமைப்புப் பணிகளுக்கு அரசு பெரும் நிதியை ஒதுக்கியுள்ள போதிலும், அனைத்துலகப் பண நிதியத்தின் (IMF) நிபந்தனைகள் சுமையாக மாறியுள்ளன. நிதியத்தின் கடன் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய அரசு முயற்சி எடுத்து வருகிறது.
அரசாங்கம் அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதால், போராட்டங்கள் ஒடுக்கப்படலாம் என மனித உரிமை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
2022 போராட்டங்களைப்போல மக்கள் வீதிக்கு வராமல் இருப்பதற்கு, அன்றாடத் தேவைகளைச் சமாளிப்பதிலேயே அவர்கள் முடங்கிக் கிடப்பதும் ஒரு காரணமாகும்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அதிபர் திசாநாயக்கவின் இடதுசாரி அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருப்பதால், அரசியல் ரீதியான குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பில்லை என அரசியல் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
சலுகை விலையில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்த மக்கள், இப்போது நீண்ட வரிசைகளிலும் தண்ணீர்க் கட்டுப்பாடுகளிலும் சிக்கித் தவிக்கின்றனர்.
வெளிநாட்டு உதவிகளும் பொருளியல் சீர்திருத்தங்களுமே இலங்கையை இந்த இருண்ட காலத்திலிருந்து மீட்க முடியும். சவால்கள் நிறைந்த இந்தச் சூழலில், புதிய அரசு மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுமா என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

