இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஒளிவழி 4ன் தகவல்கள் குறித்து அரசாங்க விசாரணை

இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: ஒளிவழி 4ன் தகவல்கள் குறித்து அரசாங்க விசாரணை

2 mins read
ef7cbbae-dcb3-4c95-ab2e-a6c8127bf420
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் நாளில் நடந்த குண்டுவெடிப்பில் 250க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். - படம்: இலங்கை ஊடகம்

கொழும்பு: இலங்கையில் 2019ஆம் ஆண்டு ஈஸ்டர் நாளில் நடந்த குண்டுவெடிப்புத் தாக்குதல் குறித்து அண்மையில் வெளியான தகவல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசாரணை நடத்தவிருக்கிறது.

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷா நாணயக்கார, நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இதைத் தெரிவித்தார்.

பிரிட்டனின் ஒளிவழி 4 அந்தத் தகவல்களை வெளியிட்டது. தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அந்நிகழ்ச்சி குறித்து இலங்கை அமைச்சரவை விவாதித்ததாகவும் அந்நிகழ்ச்சி குறித்து விசாரணை நடத்த நாடாளுமன்ற சிறப்புக் குழுவை அமைக்க முடிவெடுக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“அமைச்சரவைக் கூட்டத்தில், சிறப்பு நாடாளுமன்றக் குழுவை நியமிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும். மேலும், விசாரணை தொடர்பில், தேவைப்பட்டால் அனைத்துலக உதவியைக் கோருவது குறித்தும் அமைச்சரவை கலந்துரையாடியது. இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது,” என்று அமைச்சர் நாணயக்கார கூறினார்.

அந்தக் காணொளி வெளியாகும் நேரம் குறித்தும் அமைச்சர் கவலை தெரிவித்தார். எப்போதெல்லாம் ஐக்கிய நாட்டு நிறுவன மனித உரிமைகள் ஆணையம் அல்லது ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபையின் கூட்டம் நடைபெறுகிறதோ அப்போதெல்லாம் அக்கூட்டங்களுக்கு முன்பாக இத்தகைய நிகழ்ச்சிகளை, ஒளிவழி 4 வெளியிடுவதை அவர் சுட்டினார்.

செப்டம்பர் 5ஆம் தேதி வெளியிடவிருக்கும் காணொளியில் நம்பகமானவர்களின் நேர்காணல்கள் இடம்பெறுவதாகவும் 2019ஆம் ஆண்டு 250க்கு மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கிய ‘ஈஸ்டர் சண்டே’ குண்டுவெடிப்புத் தாக்குதல்களுக்கு இலங்கை அரசாங்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததாக அவர்கள் குற்றம் சாட்டுவதாகவும் ஒளிவழி 4 கூறுகிறது.

குறிப்புச் சொற்கள்