வாஷிங்டன்: ‘எஸ்எஸ் யுனைடெட் ஸ்டேட்ஸ்’ எனப்படும் அமெரிக்காவின் ஆகப்பெரிய பயணிகள் கப்பலாக ஒரு காலத்தில் விளங்கிய கப்பல் அதன் இறுதிப் பயணத்தை மேற்கொள்ளவிருக்கிறது.
முன்பு அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோரை அட்லான்டிக் பெருங்கடல்வழி ஏற்றிச் சென்ற 990 அடி நீளம்கொண்ட இக்கப்பல் 1952ஆம் ஆண்டு அதன் முதல் பயணத்தை மேற்கொண்டது. வரும் நவம்பர் மாதம் இந்தக் கப்பல் அமெரிக்காவின் ஃபுளோரிடா வளைகுடா கடற்கரைப் பகுதிக்கு அருகே மூழ்கடிக்கப்படவுள்ளது. அங்கு உலகின் ஆகப்பெரிய செயற்கைக் கடலடிக் கட்டமைப்பாகத் (artificial reef) திகழவிருக்கிறது.
நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இக்கப்பலை மூழ்கச் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
‘எஸ்எஸ் யுனைடெட் ஸ்டேட்ஸ்’ தற்போது அலபாமா மாநிலத்தின் மொபீல் நகரில் உள்ளது. அங்கு கப்பலின் பயன்பாட்டு மாற்றத்துக்கான வேலைப்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.
கப்பல் அழிக்கப்படாமல் இருப்பதற்காக, ஃபுளோரிடா மாநிலத்தின் ஒக்கலூசா பகுதி ‘எஸ்எஸ் யுனைடெட் ஸ்டேட்ஸ்’ கப்பலை வாங்கியது. அது, கப்பலை மெக்சிகோ வளைகுடாவில் உள்ள டெஸ்டின்-ஃபோர்ட் கடற்கரைப் பகுதிக்கு 22 நோட்டிக்கல் மைல் தொலைவில் மூழ்கடிக்கத் திட்டமிட்டுள்ளது.
கடல் உயிரினங்கள் வாழ்வதற்கான இடத்தை அமைத்துத் தருவதும் முக்குளிப்பாளர்கள், சுற்றுப்பயணிகள் உள்ளிட்டோர் சுற்றிப்பார்க்கப் புதிய அம்சத்தை ஏற்படுத்தித் தருவதும் இந்நடவடிக்கையின் இலக்குகளாகும்.
