ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலத்தில் உள்ள முக்கிய அரசு மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் 2,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மலேசியச் சுகாதார அமைச்சகத்திற்கு அம்மாநில அரசு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.
வேலைச்சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், அதன் காரணமாக ஊழியர்கள் வேலையை விட்டு விலகி வருவதாலும் இந்த நடவடிக்கை அவசியமாகிறது என்று ஜோகூர் மாநில முதல்வர் ஓன் ஹஃபிஸ் காஸி இது குறித்துத் தீவிரக் கவலை தெரிவித்துள்ளார்.
சுல்தானா அமீனா மருத்துவமனை, சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனை, பாசிர் கூடாங் மருத்துவமனை ஆகியவற்றில் சுகாதார ஊழியர்கள் பற்றாக்குறை மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டியுள்ளது என்று தமது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காணொளியில் அவர் சுட்டிக்காட்டினார்.
ஊழியர் பற்றாக்குறையால் ஏற்பட்ட மிதமிஞ்சிய பணிச்சுமையைச் சமாளிக்க முடியாமல் பல மருத்துவ ஊழியர்கள் பணிவிலகல் செய்துள்ளனர். இதனால் நோயாளிகளுக்கான சேவைகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாநில அரசின் கோரிக்கையை மத்திய அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சில நாள்களுக்கு முன்பு சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு நேரில் சென்ற திரு ஓன் ஹஃபிஸ், அங்குள்ள கள நிலவரத்தையும் நோயாளிகளின் நிலையையும் பார்வையிட்டார்.
மருத்துவச் சேவைகள் தடங்கலின்றித் தொடர்வதை உறுதிசெய்ய மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.
அந்நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அம்மருத்துவமனையின் அவசர மற்றும் விபத்துப் பிரிவு வரும் ஆகஸ்ட் மாதத் தொடக்கத்தில் மகப்பேறு மையத்திற்குத் தற்காலிகமாக மாற்றப்பட உள்ளது.
இதன்மூலம் மருத்துவமனையின் மின்சாரக் கட்டமைப்பு சீரமைப்புப் பணிகளைப் பாதுகாப்பாக மேற்கொள்ள முடியும். மேலும், பிரதான மின் விநியோகம், மின்சார மற்றும் இயந்திர அமைப்புகளை மேம்படுத்த ஏறத்தாழ 159 மில்லியன் ரிங்கிட் செலவில் திட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

