மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு குழுவாகப் புகைப்படமெடுக்கும் போது மேடை சரிந்தது. இதில் 28 பேர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் பிப்ரவரி 27ஆம் தேதி நடந்தது. அதுகுறித்த காணொளி தற்போது இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
ஐபெரோ-அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த மாணவர்கள், புகைப்படமெடுப்பதற்காக ஏழு அடுக்குகள் கொண்ட மேடையில் நின்றனர்.
மாணவர்கள் புகைப்படத்திற்காக புன்னகையுடன் நின்றுகொண்டிருந்தபோது மேடை திடீரெனச் சரிந்தது. இதனால் பின் வரிசையில் இருந்தவர்கள் கீழே விழுந்தனர். அதன்பின்னர் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்டவர்கள் 2022-2026ஆம் ஆண்டு மாணவர்கள். அவர்கள் உளவியல் துறை பயின்றனர்.
காயமடைந்த 28 பேரில் 23 பேருக்குப் பல்கலைக்கழகத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. மற்ற ஐந்து பேர் மேற் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
புகைப்படம் எடுக்கும்போது அந்த மேடையில் கிட்டத்தட்ட 150 பேர் இருந்தனர்.

