முடங்கியுள்ள அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை, பாகிஸ்தானின் சமரச முயற்சியின் வரம்புகளைக் காட்டுகின்றன

முடங்கியுள்ள அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை, பாகிஸ்தானின் சமரச முயற்சியின் வரம்புகளைக் காட்டுகின்றன

2 mins read
d7c3b8ab-1d65-468d-95fc-8696fb6046ae
பல வாரங்களாக அமலில் இருந்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை இஸ்லாமாபாத் ஏப்ரல் 26ஆம் தேதி தளர்த்தத் தொடங்கியது. இது இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை விரைவில் நடைபெற வாய்ப்பில்லை என்பதற்கான மேலும் சில அறிகுறிகளாகும். - படம்: ஏஎஃப்பி

வாஷிங்டன்/இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கடைசி நேர முயற்சி இருந்தபோதிலும், அமெரிக்காவும் ஈரானும் இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்கத் தவறிவிட்டன.

பல நாள்கள் எதிர்பார்ப்புக்குப் பிறகு, ஏப்ரல் 25ஆம் தேதியன்று நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை தடைபட்டது, இரண்டு மாத காலப் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு தீர்வை ஏற்படுத்த இஸ்லாமாபாத் மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

ஈரானுடனான இரண்டாம் சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைக்காக, தனது சிறப்புத் தூதர்களான மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் திரு ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இஸ்லாமாபாத்திற்கு மேற்கொள்ளவிருந்த பயணத்தை, அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஏப்ரல் 25ஆம் தேதி ரத்து செய்தார். புதிய பேச்சுவார்த்தைகளுக்குத் தகுதிபெறும் வகையில், இஸ்லாமியக் குடியரசு ‘நிறைய வழங்கியிருந்தாலும், அது போதுமானதாக இல்லை’ என்றும் அவர் கூறினார்.

மாறாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஏப்ரல் 25, 26 ஆகிய தேதிகளில் இஸ்லாமாபாத்திற்கு இரண்டு தனித்தனி பயணங்களை மேற்கொண்டார். பாகிஸ்தான் சமரசப் பேச்சாளர்கள் மூலம் அமெரிக்காவிற்கு ஒரு புதிய முன்மொழிவு தெரிவிக்கப்பட்டது என ஆக்சியோஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவையும் ஈரானையும் மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குக் கொண்டுவரத் தவறியது, ராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் ஆசிம் முனீர், பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தானின் சமரச முயற்சிகளின் வரம்புகளைச் சுட்டிக் காட்டுகிறது.

ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் இருந்து போர் நிறுத்தம் பெரும்பாலும் நீடித்திருந்தாலும், கச்சா எண்ணெய், எரிபொருள், இயற்கை எரிவாயு விநியோகத்தைத் தடுத்துள்ள ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகை விஷயத்தில் அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து முட்டுக்கட்டையில் உள்ளன.

மேலும், தனது அணுசக்தித் திட்டத்தை முழுமையாகக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையையும் ஈரான் எதிர்த்து வருகிறது.

கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 107 அமெரிக்க டாலருக்குமேல் அதிகரிப்பு

அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள தேக்கநிலை காரணமாக, கச்சா எண்ணெய் விலை இரண்டு விழுக்காடு அதிகரித்து, பீப்பாய்க்கு 107 அமெரிக்க டாலருக்குமேல் உயர்ந்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் உலகளாவிய நிலையில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை (ஏப்ரல் 27) காலை 7.45 மணியளவில், கச்சா எண்ணெய் அளவுகோலான ‘பிரென்ட்’ எண்ணெய் விலை 2.05 விழுக்காடு உயர்ந்து பீப்பாய்க்கு 107.49 அமெரிக்க டாலராகப் பதிவானது. அமெரிக்காவின் ‘வெஸ்ட் டெக்சஸ் இன்டர்மீடியட்’ எண்ணெய் விலை 1.9 விழுக்காடு உயர்ந்து 96.17 அமெரிக்க டாலருக்கு விற்கப்படுகிறது.

சென்ற வாரம் அவற்றின் விலை முறையே 17, 13 விழுக்காடு ஏற்றம் கண்டது. ஈரான் போர் தொடங்கியதிலிருந்து ஒரு வார காலகட்டத்தில் ஆக அதிக விலையேற்றம் அது என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்