ஜகார்த்தா: ஜகார்த்தாவின் பெருவிரைவுப் போக்குவரத்துக் கட்டமைப்பில் (எம்ஆர்டி) புதிய ரயில் தடத்திற்கான கட்டுமானப் பணிகளை இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ புதன்கிழமை (செப்டம்பர் 11) தொடங்கி வைத்தார்.
அந்தத் தடத்தை உருவாக்க ஜப்பான் ஏறக்குறைய $1 பில்லியன் கடனாகத் தந்து உள்ளது.
ஜகார்த்தாவின் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாண அந்தப் புதிய ரயில் பாதை உருவாக்கப்படுகிறது.
உலகளவில் மோசமான போக்குவரத்து நெரிசலைக் கொண்டிருக்கும் நகரங்களில் ஜகார்த்தாவும் ஒன்று. அங்கு 10 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் அந்நகரில் வசிக்கின்றனர்.
அத்துடன், அதனைச் சுற்றியுள்ள நகரங்களில் முப்பது மில்லியனுக்கும் அதிகமானோர் உள்ளனர்.
அந்த வட்டாரத்தில் 2019ஆம் ஆண்டு, முதல் எம்ஆர்டி ரயில் பாதை தொடங்கப்பட்டது.
புதிய தடம் 25 கிலோமீட்டர் (15 மைல்) நீளம் கொண்டது. அதனை நிறுவும் பணிகள் 2031ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜகார்த்தாவின் கிழக்கு எல்லை நகரான பெக்காசியை மேற்கு வட்டாரத்துடன் இணைக்கும் ரயில் தடம் அது என்று திரு விடோடோ அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“முதல் ரயில் தடம் ஜகார்த்தா மற்றும் இந்தோனீசியாவின் போக்குவரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. அந்த வகையில் புதிய தடமும் நன்மைகளை விளைவிக்கும்,” என்றார் அவர்.
இந்தோனீசியாவின் ரயில் தடத் திட்டத்திற்கு 141 மில்லியன் யென் ($998,000) கடனாக வழங்கப்படும் என்று ஜப்பானிய அனைத்துலக ஒத்துழைப்பு முகவை கடந்த மே மாதம் அறிவித்து இருந்தது.
இந்தோனீசியாவின் முதல் எம்ஆர்டி தடத்திற்கும் ஜப்பான் நிதி உதவி அளித்திருந்தது. ஜக்கார்த்தாவின் தென் பகுதியையும் மத்திய பகுதியையும் இணைக்கும் 8 கிலோமீட்டர் (5 மைல்) ரயில் பாதை அது.
அந்தத் தடத்தை வடக்கு நோக்கி விரிவுபடுத்தும் பணிகள் 2029ஆம் ஆண்டு நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.