ஆரம்ப சம்பளம் $1,100; மலேசியாவில் 2 கி.மீ. வரிசையில் மக்கள்

ஆரம்ப சம்பளம் $1,100; மலேசியாவில் 2 கி.மீ. வரிசையில் மக்கள்

2 mins read
3aef811a-94af-476e-97b4-17711ca622dc
வரிசை போக்குவரத்து அதிகமாக இருக்கும் சாலை வரை நீண்டது. - படம்: ரமே‌ஷ் காசி / ஃபேஸ்புக்
Google News Preferred Icon

மலாக்கா: மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் பகுதி மின்கடத்தி நிறுவனம் ஒன்று 500 வேலைவாய்ப்புகளை வழங்குவதாக அறிவித்திருந்தது.

அந்த வேலைகளுக்கான ஆரம்பச் சம்பளம் 3,500 ரிங்கிட் (1,103 வெள்ளி) என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து 1,000க்கும் மேற்பட்ட மலேசியர்கள் அந்த வேலைகளுக்காகக் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் நீளம்கொண்ட வரிசையில் சுட்டெரிக்கும் வெயிலில் காத்திருந்தனர்.

அதிகாலையிலிருந்து காத்திருப்பு

ஜெர்மனியின் இன்ஃபினியோன் டெக்னாலஜிஸ் ஏஜி நடத்திய பொது நேர்காணல் நிகழ்வில் கலந்துகொள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 14) சிலர் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் ஹாலிடே இன் ஹோட்டலுக்குச் சென்றிருந்தனர்.

உற்பத்திச் செயல்பாட்டு ஊழியர்கள், தொழில்நுட்பச் செயல்பாட்டு ஊழியர்களை அந்நிறுவனம் வேலைக்கு எடுக்கிறது.

பாதுகாப்பு தொடர்பான அச்சம்

நேர்காணலுக்கு மக்கள் திரளாகச் சென்றதைக் காட்டும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதிகமானோர் திரண்டதால் மக்களின் வரிசை ஹோட்டல் உள்ளே தொடங்கி வெளியே போக்குவரத்து அதிகமாக இருக்கும் சாலை வரை நீண்டது. இதனால் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் தலைதூக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

கூட்டம் அலைமோதியதால் மக்கள் தங்களின் சுயவிவர ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய நிறுவனம் காலை 10 மணிக்கு கியூஆர் குறியீடு ஒன்றை விநியோகித்தது. வீட்டில் ஆவணங்களைப் பதிவேற்றம் செய்யுமாறு வந்திருந்த மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டதாக சின் சியூ சீன நாளிதழ் தெரிவித்தது.

எனினும், பலர் காத்திருக்க விரும்பியதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டது.

மக்கள் இவ்வாறு திரண்டது மாநில முதல்வர் அப்துல் ராவுஃப் யூசோஃப், மேயர் ‌ஷடான் ஓத்மான் ஆகியோரின் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து வரிசையில் காத்திருந்தோருக்கு உணவு, பானம் விநியோகிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்
உலகம்மலேசியாவேலைவேலைவாய்ப்புநிறுவனம்பகுதி மின்கடத்தி