கோலாலம்பூர்: சுற்றுலாவை மேற்கொள்ளும் நோக்கில் நாட்டிற்குள் நுழைந்து பின்னர் உணவகங்களிலும் தொழிற்சாலைகளிலும் வேலை செய்வதற்காகச் சமூக வருகை அனுமதி விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டவர்களைத் தொடர்ந்து கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என குடிநுழைவுத் துறை இயக்குநர் ஸக்காரியா ஷாபான் தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 9ஆம் தேதி வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 2,618 அமலாக்க நடவடிக்கைகளின் மூலம் மொத்தம் 9,497 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 1,158 பேர், 1963ஆம் ஆண்டு குடிநுழைவு விதிகள் 39(b) பிரிவின் கீழ், விசா நிபந்தனைகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
“பல வெளிநாட்டவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட விசா வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக தற்காலிக வேலை அனுமதி மற்றும் சமூக வருகை அனுமதி விசாக்களைப் பயன்படுத்தி, அந்த அனுமதியில் குறிப்பிடப்பட்ட விதிகளுக்கு மாறாக வேலை செய்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
இத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, குடிநுழைவுத் துறை தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்ததாகத் தமிழ் மலர் செய்தி தெரிவிக்கிறது.

