பட்டர்வொர்த்: மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்தி, அவர்களின் ஆற்றலை வெளிக்கொணர உதவும் வசதிகள், பயிற்சி, ஆதரவை வழங்குவதன் மூலம் அவர்களை வலுவூட்டுவதற்காக, மேலும் பல தனியார் நிறுவனங்கள் பெருநிறுவன சமூகப் பொறுப்பு முன்னெடுப்புகளை மேற்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரம் அளிப்பது என்பது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, அதற்கு தனியார் துறை, உள்ளூர் சமூகங்கள், அமைப்புகள், பொதுமக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்று பெண்கள், குடும்பம், சமூக மேம்பாட்டுத் துணை அமைச்சர் லிம் ஹுய் யிங் கூறினார்.
“நாம் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், சிறந்த வசதிகளை உருவாக்குவது மட்டுமல்லாமல், அனைவரும் மதிக்கப்பட்டு வெற்றிபெற வாய்ப்பளிக்கிறோம். மேலும் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சமூகத்தையும் உருவாக்குகிறோம்,” என்று அவர் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 3) செபெராங் ஜெயா சமூக அடிப்படையிலான மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற 360° கித்தா பெர்சமா திட்டத்தின் தொடக்க விழாவில் கூறினார்.
பினாங்கு சமூக நலத்துறை இயக்குநர் ரோசிதா இப்ராஹிம், பெட்ரோன் சில்லறை வணிகப் பிரிவுத் தலைவர் ஷாலிசா முகமது சைடெக் ஆகியோரும் உடனிருந்தனர்.
சமூக நலத்துறை, செபராங் ஜெயா பொது மாற்றுத்திறனாளிகள் சேவை மையம், பினாங்கிலுள்ள பெட்ரோன் சேவை நிலைய நடத்துநர்கள் உள்ளிட்ட பெருநிறுவனத் துறை ஆகியவற்றுக்கு இடையேயான இந்த உத்திபூர்வ ஒத்துழைப்பு, மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு மேலும் பல தனியார் நிறுவனங்கள் பங்களிக்க ஒரு முன்மாதிரியாகவும் உத்வேகமாகவும் அமையும் என்று திருவாட்டி லிம் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் அவர், தற்போது நாடு முழுவதும் 576 பொது மாற்றுத்திறனாளிகள் சேவை மையங்கள், சுமார் 22,000 மாற்றுத்திறனாளிகளுக்குச் சேவைகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே, பினாங்கிலுள்ள 47 பெட்ரோன் சேவை நிலைய நடத்துநர்களின் சமூகப் பொறுப்புணர்வு முயற்சியான ‘360° கித்தா பெர்சமா திட்டம்’ என்பதன் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள 24 செபராங் ஜெயா பொது மாற்றுத்திறனாளிகள் சேவை மையங்களில், ஓராண்டு உத்தரவாதத்துடன் உயர்தரமான கண்காணிப்பு கேமராக்கள், மின்னிலக்க காணொளி ஒளிப்பதிவுச் சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

