வாஷிங்டன்: அமெரிக்காவின் வடகிழக்கில் ஏற்பட்டுள்ள பனிப்புயலால், வியாழக்கிழமை (நவம்பர் 28) மதியத்திற்குள் சில இடங்களில் 6 அங்குல அளவு பனி நிரம்பியுள்ளது.
வார இறுதியில் சில பகுதிகளில் பனிபொழியும் என்பதால், ‘தேங்க்ஸ்கிவிங்’ விடுமுறைக்குப் பயணம் மேற்கொள்ளும் ஓட்டுநர்களுக்கு அது ஆபத்தாக அமையக்கூடும் என்று கூறப்படுகிறது.
புயல் வடகிழக்கு பென்சில்வேனியாவிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. அதோடு, நியூ இங்கிலாந்து வடக்குப் பகுதியிலும் பனி பொழிந்தது.
ஓர் அடிக்கு மேலான பனி, ‘மெய்ன்’ மாநிலத்திலும் வடக்கு ‘நியூ ஹேம்ஷியர்’ பகுதியிலும் பெய்யக்கூடும் என்று தேசிய வானிலைச் சேவை கூறியது.
அட்லாண்டிக் வட்டாரத்தில் 6 அங்குல பனிப்பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் நேரப்படி, வெள்ளிக்கிழமை (நவம்பர் 29) அதிகாலை ஒரு மணிவரை குளிர்காலப் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இவ்வாண்டு ‘தேங்க்ஸ்கிவிங்’ விடுமுறைக்காக, கிட்டத்தட்ட 72 மில்லியன் வாகனமோட்டிகள் பயணம் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நவம்பர் 28ஆம் தேதி புயல் விடுமுறைக் கூட்டங்களுக்குத் தடையாக இருக்கக்கூடும்.
இந்த வாரம் மட்டுமே மில்லியன்கணக்கான அமெரிக்கர்கள் ஏற்கெனவே பயணம் மேற்கொண்டுள்ளனர். நவம்பர் 27ஆம் தேதி, விமான நிலையப் பாதுகாப்புச் சோதனைச்சாவடிகளை கிட்டத்தட்ட 2.7 மில்லியன் பயணிகள் கடந்துசென்றதாக போக்குவரத்துப் பாதுகாப்பு நிர்வாகம் தெரிவித்தது.