பசிபிக் பெருங்கடலைப் படகில் கடந்துவிடவேண்டும் என்ற சாசகப் பிரியர் ஒருவரின் கனவு கடைசி நேரத்தில் கலைந்தது.
அமெரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குப் படகில் செல்ல முயன்றார் 44 வயது ஆரிமஸ் மோக்கஸ்.
லிதுவேனியாவைச் சேர்ந்த அவர் இலக்கை எட்ட இன்னும் ஒருசில நாள்களே இருந்தபோது அவரது ஆசையை நிராசையாக்கியது கடும் புயல்.
‘அல்ஃப்ரெட்’ புயலால் கடல் கொந்தளிப்பு அதிகரித்ததுடன் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசியது. உயிர் பிழைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தார் மோக்கஸ். எனவே, கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) உதவி கோரி சமிக்ஞை அனுப்பினார்.
ஆஸ்திரேலியாவின் மேற்குக் கரையில் இருக்கும் மெக்கே நகருக்குக் கிழக்கே ஏறக்குறைய 740 கிலோமீட்டர் தொலைவில் திங்கட்கிழமை (மார்ச் 3), மோக்கசை அதிகாரிகள் மீட்டனர்.
பசிபிக் பெருங்கடலைக் கடப்பதற்காகக் கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் படகில் தனியாகப் பயணம் செய்தார் 44 வயது மோக்கஸ்.
தற்போது ஆஸ்திரேலியப் போர்க்கப்பலில் அவருக்கு சிகிச்சை வழங்கப்படுகிறது.
பின்னர் அவர் சிட்னி நகருக்கு அழைத்துச் செல்லப்படுவார் என்று ஆஸ்திரேலியக் கடற்படை சொன்னது.