MH370: சீனாவில் உறவினர்கள் கடைசி நேரத்தில் வழக்கு

MH370: சீனாவில் உறவினர்கள் கடைசி நேரத்தில் வழக்கு

1 mins read
ac601444-4720-45d8-b2ef-bb73f88f22fe
-

கோலாலம்பூர்: மலேசியாவில் MH370 விமானம் மாயமாய் மறைந்து இன்றுடன் ஈராண்டுகள் ஆகின்றன. இந்நிலையில் இழப்பீடு கோரி மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எதிராக சீனாவில் உள்ள உறவினர்கள் பலர் நேற்று மனு தாக்கல் செய்தனர். சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த காலக்கெடு இன்று முடிவடையும் நிலையில் கடைசி நேர வாய்ப்பை பலர் பயன்படுத்திக் கொண்டதாகக் கூறப்பட்டது.

பெய்ஜிங்கில் உள்ள நீதி மன்றத்திற்கு நேற்று வந்திருந்த உறவினர்கள் அந்த துயரச் சம்பவத்தை நினைத்து கண்கலங்கினர். வழக்குத் தொடுத்திருப்பவர்கள் ஐந்து மில்லியனிலிருந்து 8 மில்லியன் யுவான் வரை இழப்பீடு கேட்டு வழக்குத் தொடுத்திருப்பதாக வழக்கறிஞர் ஒருவர் கூறினார். 2014ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி மொத்தம் 239 பேருடன் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் மாயமாய் மறைந்தது. அப்போதிலிருந்து அந்த விமானத்தைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வரு கிறது. இந்நிலையில் ரியூனியன் தீவில் காணப்பட்ட 2வது விமானப் பாகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாயமாய் மறைந்த மலேசிய விமானத்தின் பாகமாக இருக்கலாம் என்று மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

விமானப் பயணிகளின் உறவினர்கள் மனு தாக்கல் செய்ய வந்திருந்தபோது கண்கலங்கினர். படம்: ஏஎஃப்பி