அரசாங்க நிதியைப் பயன்படுத்தியது தொடர்பில் தோக்கியோ ஆளுநர் பதவி விலகினார்

அரசாங்க நிதியைப் பயன்படுத்தியது தொடர்பில் தோக்கியோ ஆளுநர் பதவி விலகினார்

1 mins read

தோக்கியோ: ஜப்பானில் தோக்கியோ ஆளுநர் யோய் மசுசோவ், அரசாங்க நிதியை தவறாகப் பயன்படுத்தினார் என்று குற்றச்சாட்டு நிலவும் வேளையில் அவர் நேற்று பதவி விலகியதாக ஜப்பானிய ஊடகத் தகவல் தெரிவித்தது. விடுமுறைச் செலவு மற்றும் அவரது பிள்ளைகளுக்கு புத்தகங்கள் மற்றும் கலைப் பொருட்கள் வாங்குவதற்கு ஆகும் செலவு ஆகியவற்றுக்கு அவர் அரசாங்கப் பணத்தை பயன்படுத்தியாக அவர் மீது குறை கூறப்பட்டு வருகிறது. ஜப்பானிய நாடாளுமன்றத்தில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்படும்போது அத்தீர்மானத்திற்கு ஆதரவாகவும் அவருக்கு எதிராகவும் பலர் வாக்களிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த ஆளுநர் மீது கூறப்படும் மோசடி விவகாரம் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இருக்கும் ஜப்பான் நாட்டுக்கு கெட்ட பெயரை உண்டாக்கும் என்று கருதப்படுகிறது. அத்துடன் வரும் ஜூலை 10ஆம் தேதி ஜப்பானிய நாடாளுமன்ற மேலவையில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் பிரதமர் ‌ஷின்சோ அபேயின் ஆளும் மிதவாத ஜனநாயகக் கட்சிக்கு பின்னடைவை ஏற் படுத்தக்கூடும் என்று கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. சட்ட விதிமுறைகளை மீறியதாக கூறப்படுவதை திரு மசுசோவ் மறுத்துள்ளார். ஆனால் அவர் தான் அதிகமாக செலவு செய்வதை ஒப்புக்கொண்டுள்ளார். ஏப்ரல் மாதம் அவர் தனது அலுவலகக் காரை சொந்தப் பயனுக்குப் பயன்படுத்தியதாக வும் கூறப்பட்டது.