இஸ்தான்புல்: துருக்கியின் தலைநகரம் இஸ்தான்புல்லில் கடந்த செவ்வாய்க்கிழமை ஐஎஸ் பயங்கரவாதிகளால் கொடூரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அத்தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். துருக்கியின் பெரிய நகரம் ஒன்றில் நிகழ்ந்த பெரிய தாக்குதல் இதுவே. டாக்சியில் இருந்து தானியங்கித் துப்பாக்கியுடன் இறங்கிய மூன்று பேர் அட்டாட்டர்க் அனைத்துலக விமான நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த பயணிகளை நோக்கி சரமாரியாகச் சுட்டுத் தள்ளினர்.
பின்னர் தங்கள் உடம்பில் கட்டப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தனர். இஸ்ரேல், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் உறவை துருக்கி புதுப்பித்துக் கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலை உலகத் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக உலகம் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று துருக்கி அதிபர் ரெசெப் எச்டோன், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்தத் தாக்குதலுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்பதாக அறிவிக்கவில்லை.
பயங்கரவாதிகளை அடியோடு ஒழிக்கும் வரை போராட துருக்கி தயாராக உள்ளது. அதற்கான உறுதியும் வலுவும் துருக்கியிடம் உள்ளது என்று அந்நாட்டு அதிபர் எர்டோன் கூறியுள்ளார். துருக்கியில் உள்ள பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளின் தூதரகங்கள், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தை விட்டு ஒதுங்கி, பாதுகாப்பாக இருக்குமாறு அவற்றின் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளன. இந்நிலையில் இந்தத் தாக்குதலைப்போன்ற பெரிய அளவிலான தாக்குதல் ஒன்றை அமெரிக்காவில் நிகழ்த்த ஐஎஸ் பயங்கரவாதிகள் திட்டமிடுவதாக அமெரிக்காவின் மத்திய உளவுத் துறையின் இயக்குநர் ஜான் பிரென்னன் எச்சரித்துள்ளார். யாஹு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் திரு ஜான் பிரென்னன், "இஸ்தான்புல் தாக்குதலுக்குக் காரணமான ஐஎஸ் பயங்கரவாதிகள் இதுபோன்ற தாக்குதலை அமெரிக்காவில் நிகழ்த்தாமல் இருந்தால் நான் ஆச்சரியப்படுவேன்," என்று கூறியுள்ளார்.

