ஏமாந்த கொள்ளையர்கள்

ஏமாந்த கொள்ளையர்கள்

1 mins read

புத்ராஜெயா: மலேசியாவில் பட்டப் பகலில் கொள்ளை யடிக்க முயன்ற சிலரின் முயற்சி தோல்வி அடைந்தது. ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள் மூவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து நகர்ப் பகுதிக்கு டொயோட்டா காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது புத்ராஜெயா கடைத் தொகுதிக்கு அருகே அவர்களது காரை கொள்ளையர்கள் சிலர் வழிமறித்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

இரண்டு கார்கள் மற்றும் இரு மோட்டார் சைக்கிள் களில் வந்திருந்த கொள்ளையர்கள், அக்காரில் அதிகப் பணம் இருப்பதாக நினைத்து அதனை கொள்ளயடித்துச் செல்ல அந்த டொயோட்டா காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்பட்டது. அந்தக் கார், குண்டு துளைக்காத கார் என்பதோ அக்காரில் பணம் எதுவும் இல்லை என்பதோ கொள்ளையர்களுக்குத் தெரியாது. விமான நிலையத்திலிருந்து அதிகப் பணத்தை அந்த ஊழியர்கள் எடுத்து வருவதாக அந்தக் கொள்ளையர்கள் தவறாக நினைத்திருக்க வேண்டும் என்று போலிஸ் அதிகாரி கூறினார். அந்த ஊழியர்கள், தங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமான பணத்தை உரியவரிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் கொள்ளையர்கள் அந்தக் காரை வழிமறித்துள்ளனர். அந்தக் கொள்ளையர்களை போலிசார் தேடி வருகின்றனர்.