கோலாலம்பூர்: - பினாங்கில் உடனடியாக திடீர் தேர்தல் நடத்தினால் எதிர்க்கட்சிகள் பல இடங்களை இழக்கும் ஆபத்து உள்ளது என்று பிகேஆர் எனப்படும் கெஅடிலான் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வார் கூறினார். "உண்மையில் நாம் அந்த ஆபத்தில்தான் இருக்கிறோம். உடனடித் தேர்தல் நடத்தினால் மும்முனைப் போட்டி நிலவும் என்ற நிலையில் அம்னோ மட்டுமே வெற்றி பெறும்" என்றார் அவர். திடீர் தேர்தல் நடத்தினால் அது அம்னோ கட்சிக்கு ஆதாயமாகவே இருக்கும் என்றும் அவர் சொன்னார். ஜனநாயக செயல் கட்சியும் அமானா கட்சியும் பினாங்கில் உடனடியாக திடீர் தேர்தல் நடத்த விருப்பம் கொண்டுள்ளன.
ஆனால் அங்கு திடீர் தேர்தலை நடத்த கெஅடிலான் கட்சி ஆரம்பத்திலிருந்தே தயக்கம் காட்டி வருகிறது. இதுபற்றி வினவியபோது நூருல் இஸா இவ்வாறு கூறினார். பினாங்கில் திடீர் தேர்தல் நடத்துவது குறித்து எதிர்க்கட்சி கூட்டணி தொடர்ந்து கலந்துரை யாடல்களில் ஈடுபட்டுள்ளது என்றும் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறினார். ஜனநாயக செயல் கட்சியைச் சேர்ந்த டோனி புவாவும் கெஅடிலான் கட்சியின் லத்தீஃபா வும் சமூக வலைத்தளங்களில் கூறிய கருத்துகள் குறித்து நூருல் இஸாவிடம் கேட்டபோது " புவா என்னுடைய நல்ல நண்பர், அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன்" என்று கூறினார். கெஅடிலான் கட்சி, பினாங்கில் திடீர் தேர்தல் பற்றிய அதன் முடிவை விரைவில் தெரிவிக்கும் என்று நூருஸ் இஸா தெரிவித்தார்.

