ஹிரோ‌ஷிமா குண்டு வீச்சு 71ஆம் ஆண்டு நினைவு தினம்

ஹிரோ‌ஷிமா குண்டு வீச்சு 71ஆம் ஆண்டு நினைவு தினம்

2 mins read
3e9fabd9-8b70-4acf-be5b-eecb4c8702e6
-

தோக்கியோ: அமெரிக்காவின் அணுகுண்டு தாக்குதலில் ஜப்பானின் ஹிரோ‌ஷிமா நகரம் தகர்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 6ஆம் தேதி. 71 ஆண்டுகள் ஆகிவிட்டன. அந்த நாள் இன்னமும் பலரின் நினைவில் நீங்காத துயர நாளாக நிலைத்திருக்கவே செய்கிறது. 71ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நேற்று ஜப்பானிய மக்கள் ஹிரோ‌ஷிமாவில் உள்ள நினைவுப் பூங்காவில் ஒன்றுகூடினர். அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானோரை நினைத்து மக்கள் அஞ்சலி செலுத்தினர். அணுவாயுதங்களை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று ஹிரோ‌ஷிமா ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி காலை 8.15 மணியளவில் ஹிரோ‌ஷிமா நகர் மீது அமெரிக்கா அதன் முதல் அணுகுண்டை வீசியது. அத்தாக்குதலில் 140,000 பேர் உயிரிழந்தனர். அதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் நாகசாகி நகர் மீது அமெரிக்கா அதன் 2வது அணுகுண்டை வீசியது, அத்தாக்குதலில் அந்நகரம் தரைமட்டமானது. ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பான் சரண் அடைந்தது. அமெரிக்காவின் அத்தாக்குதலை அமெரிக்கர்கள் பலர் நியாயப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதபர் ஒபாமா கடந்த மே மாதம் தோக்கியோ சென்றிருந்தபோது ஹிரோ‌ஷிமா நகருக்குச் சென்றிருந்தார். அமைதிப் பூங்காவுக்கும் அவர் சென்றார்.

ஜப்பானின் ஹிரோ‌ஷிமா நகரம் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசித் தாக்கிய 71ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று அங்குள்ள அமைதிப் பூங்காவில் மக்கள் ஒன்றுகூடி அணுகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். ஜப்பான் என்றும் அமைதியை விரும்புகிறது என்பதற்கு அடையாளமாக ஏராளமான புறாக்கள் பறக்கவிடப்படுகின்றன. படம்: ஏஎஃப்பி