மெல்பர்ன்: பயங்கரவாதத்துக்கு எதிராக போலிசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது சிக்கிய 31 வயது ஆடவர் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடத் திட்டமிட்டதாக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் நேற்று குற்றம் சாட்டப்பட்டார். நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட ஃபிலிப் கலியா எனும் அந்த நபர் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்குத் தேவையான ஆவணங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டிருந்ததாகவும் அத்தகைய நடவடிக்கை ஒன்றுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருந்ததாகவும் போலிசார் தெரிவித்தனர். விக்டோரியா மாநிலத்தில் தாக்குதல் நடத்த அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
"தேசபக்தி இயக்கத்துக்கு எதிரான சதி என இதை நினைக்கிறேன். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகப் போராடுவேன்," என மெல்பர்ன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கலியா கூறியதாக ஆஸ்திரேலியாவின் அசோசியேட்டட் பிரஸ் குறிப்பிட்டிருந்தது. 'ரிக்ளெய்ம் ஆஸ்திரேலியா', 'ட்ரூ புளூ க்ரூ' போன்ற வலதுசாரி அமைப்புகளுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டன. 'ரிக்ளெய்ம் ஆஸ்திரேலியா' அமைப்பு அவருடனான தொடர்பை மறுத்ததுடன் வன்முறையை ஆதரிப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

