2017 இறுதிக்குள் தாய்லாந்தில் ஜனநாயக அரசாங்கம்

2017 இறுதிக்குள் தாய்லாந்தில் ஜனநாயக அரசாங்கம்

1 mins read

பேங்காக்: தாய்லாந்தில் ராணுவம் ஆதரித்த புதிய அரசியல் சாசனத்திற்கு அந்நாட்டு மக்கள் சம்மதம் தெரிவித்ததைத் தொடர்ந்து அங்கு பொதுத்தேர்தல் நடக்க அது வழிவிட்டுள்ளது. இந்நிலையில் அங்கு 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் ஜனநாயக முறையில் தேர்ந்தேடுக்கப்பட்ட அரசாங்கம் ஆட்சி நடத்தும் என்று அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய அரசாங்கம் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் என்றும் அரசியல் சாசன சட்டத்தை வகுக்கும் குழுவின் பேச்சாளர் சாட்சாய் நா சியாங் கூறினார்.

பொது வாக்கெடுப்புக்கு முன்னதாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்=ஓ=சா உறுதி அளித்தது போல தேர்தல் 2017ஆம் ஆண்டு நடைபெறும் என்று துணைப் பிரதமர் விஸ்சானு கிரியன் காமும் கூறியுள்ளார். புதிய அரசியல் சாசனம் குறித்து மக்களின் கருத்தை அறிய அங்கு ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் 61 விழுக்காட்டிற்கும் அதிக மானோர் அந்த சாசனத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். வாக்கெடுப்பின் அதிகாரபூர்வ முடிவுகள் புதன்கிழமை அறிவிக்கப் படும் என்று தெரிகிறது. புதிய சாசனம் ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் என்றும் இதனால் அங்கு ஜனநாயக ஆட்சி மலர வாய்ப்பில்லை என்றும் தாய்லாந் தின் முக்கிய அரசியல் கட்சிகள் குறை கூறியிருந்தன.